புதுடில்லி: மேற்காசிய போர் சூழல் குறித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், நம் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, உலகளாவிய எரிசக்தி பாதுகாப்புக்கு ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து வைத்திருப்பதன் அவசியம் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர்.
இஸ்ரேல் – ஈரான் இடையே நான்காவது வாரமாக நீடித்து வரும் போரால், உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியை தொலைபேசியில் நேற்று தொடர்பு கொண்டு மேற்காசிய போர் நிலவரம் குறித்து ஆலோசித்தார். இந்த தகவலை இந்தியாவுக்கான அமெரிக்க துாதர் செர்ஜியோ கோர் பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறியதாவது:
இந்திய, அமெரிக்க தலைவர்கள் தற்போது நடந்து வரும் மேற்காசிய போர் நிலவரம் குறித்து விரிவாக ஆலோசித்தனர். குறிப்பாக உலகளாவிய எரிபொருள் வினியோகம், கடல்சார் பாதுகாப்பு குறித்து பேசினர்.
அப்போதுஇ ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை திறந்து வைத்திருப்பதன் அவசியம் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
டிரம்புடனான உரையாடலை பிரதமர் மோடியும் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.
அதில், ‘அமெரிக்க அதிபர் டிரம்புடன் நடத்திய தொலைபேசி உரையாடல் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. மேற்காசிய நிலவரம் குறித்து இருவரும் விவாதித்தோம். அந்த பிராந்தியத்தில் வெகு விரைவில் அமைதியை ஏற்படுத்த இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்பதை அதிபர் டிரம்பிடம் உறுதிபட தெரிவித்தேன்.
‘ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பதும், எப்போதும் திறந்து வைத்திருப்பதும் ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் முக்கியமானது என்பதை வலியுறுத்தினேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
ஒட்டுமொத்த உலக நாடுகளின் கவனமும் ஹார்முஸ் ஜலசந்தி மீது விழுந்திருக்கும் சூழலில், இந்திய – அமெரிக்க தலைவர்கள் அது பற்றி பரஸ்பரம் ஆலோசனை நடத்தியது, மாறிவரும் புவிசார் அரசியலில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
