டெஹ்ரான்: மேற்காசியாவில் நீடிக்கும் போர் பதற்றத்தால், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் நம் நாடு உட்பட உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், எரிபொருள் விலையை உயர்த்துவது, வரிகளை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை பல்வேறு நாடுகள் எடுத்து வருகின்றன.
அதன் தொகுப்பு:
இந்தியா
எண்ணெய் நிறுவனங்கள் மீதான சுமையைக் குறைக்க, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10 ரூபாயை மத்திய அரசு குறைத்துள்ளது.
உள்நாட்டில் தடையற்ற வினியோகத்தை உறுதி செய்ய, டீசல் மற்றும் விமான எரிபொருள் மீது ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சமையல் காஸ் சிலிண்டர் பயன்பாட்டிற்கு மாற்றாக, நகரப் பகுதிகளில் குழாய் மூலம் வினியோகிக்கப்படும் பி.என்.ஜி., எரிவாயுவிற்கு நுகர்வோர் மாற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை
மற்றொரு அண்டை நாடான இலங்கையும் எரிபொருள் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உள்ளன. க்யூ.ஆர்., கோடு அடிப்படையில் எரிபொருள் பங்கீட்டு முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது, வாகனங்களுக்கான எரிபொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துகிறது. மேற்காசிய பிராந்தியத்தில் மோதல் நீடிக்கும் நிலையில், எரிபொருள் விலை மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளது.
எரிபொருள் சிக்கனத்திற்காக, வாரத்தில் இரு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. உரத் தட்டுப்பாடு, உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு போன்றவை அந்நாட்டு மக்களை கவலை அடைய வைத்துள்ளது.
பாகிஸ்தான்
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், மண்ணெண்ணெய் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
விமான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், விமானக் கட்டணங்கள் அதிகரித்துள்ளன. முக்கிய வழித்தடங்களில் உள்நாட்டு விமான டிக்கெட் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. சில வழித்தடத்தில், 150 சதவீதம் வரை கட்டணங்கள் அதிகரித்துள்ளன.
வியட்நாம்
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில், எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரிகள் ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, பெட்ரோல் விலை சுமார் 26 சதவீதம் குறைந்துள்ளது.
எகிப்து
மேற்காசிய நாடான எகிப்தில், எரிபொருள் சிக்கனத்திற்காக கடைகள், உணவகங்கள் இரவு 9:00 மணி வரை மட்டுமே செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் தெரு விளக்குகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளன. எரிபொருள் செலவினம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதால், தேவையை நிர்வகிக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என, எகிப்து பிரதமர் முஸ்தபா மட்பவுலி தெரிவித்தார்.
