ஹார்முஸ் டோல்கேட்: அமெரிக்காவின் ஆயுதத்தைக் கையில் எடுக்கும் ஈரான்? – உலகப் பொருளாதாரம் என்ன ஆகும்?

பழங்காலம் முதலே பட்டு, முத்து மற்றும் வாசனை திரவியங்களின் வர்த்தக மையமாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை, இன்று உலகப் பொருளாதாரத்தின் ‘கழுத்துப்பகுதி’ என அழைக்கப்படுகிறது. ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையே அமைந்துள்ள இந்தச் சிறிய கடல் பகுதி, பாரசீக வளைகுடாவையும் அரபிக்கடலையும் இணைக்கும் ஒரே வழியாகும்.உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20% மற்றும் எல்.என்.ஜி எரிவாயுவில் 25% இந்தப் பாதை வழியாகவே நடைபெறுகிறது. நாளொன்றுக்கு சுமார் 2 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய் இதன் வழியே கடக்கின்றன. குறிப்பாக இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற ஆசிய நாடுகளின் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்வதில் இந்த நீரிணை முதன்மையானது. எண்ணெய் தவிர உணவு, ரசாயனம் மற்றும் மின்னணு பொருட்களின் வர்த்தகத்திற்கும் இதுவே பிரதான வழி.ஹோர்மூஸ் நீரிணை வரைபடம்

ஹார்முஸ் நீரிணை முழுமையாக ஈரானுக்குச் சொந்தமானதல்ல. ஹார்முஸ் நீரிணையின் தெற்குப் பகுதி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும், இப்பகுதியில் ஈரான் தனது ராணுவ பலத்தை பேரளவில் வளர்த்துள்ளது. நவீன ஏவுகணைகள், ட்ரோன்கள் போன்ற ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகளை ஈரான் இங்கு நிலைநிறுத்தியுள்ளது. 1980-களின் ஈரான்-ஈராக் போர் முதல், சமீபத்திய பிரிட்டிஷ் மற்றும் கிரீஸ் நாட்டு கப்பல்கள் சிறைபிடிப்பு வரை, தனது அரசியல் எதிர்ப்பைக் காட்ட இப்பாதையை ஈரான் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது.இந்த நிலையில்தான் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டுத் தாக்குதல் நடத்தின. ஈரானை கட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற நோக்கில் இஸ்ரேலும் அமெரிக்காவும் கடுமையான தாக்குதல்களை நடத்திவருகின்றன. குறிப்பாக ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரத் தளங்கள் மீது அமெரிக்கா குறிவைத்துத் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதனால் ஈரானுக்கு பேரிழப்பு ஏற்பட்டிருப்பதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒன்றாகத் தெரிவித்தன.இஸ்ரேல் – காசா போர் நிறுத்தம்?

இதற்கிடையில், உலகப் பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைக்கும் நடவடிக்கையை ஈரான் கையில் எடுத்தது. அதுதான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடும் முடிவு. இதனால் உலக நாடுகள் கச்சா எண்ணெய், எரிவாயு பற்றாக்குறை போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்கு பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றன. அதனால், ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ‘இந்தப் போரை நிறுத்த வேண்டுமென்றால் என்னென்ன செய்ய வேண்டும்…’ என ஈரானுக்கு 15 நிபந்தனைகள் அடங்கிய பட்டியலை அனுப்பியிருக்கிறது.அதில் ‘ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் எண்ணத்தை கைவிடுவதில் தொடங்கி, ஹார்முஸ் நீரிணையை சுதந்திரமான கடல்வழிப் பாதையாக செயல்பட வைப்பதற்காக அதை மீண்டும் திறக்க வேண்டும். அமெரிக்கா – ஈரான் இருவரும் சேர்ந்து அதனைக் கட்டுப்படுத்தலாம்’ என்பதுவரை அந்தப் பட்டியல் நீள்கிறது.ஆனால் ஈரான், “போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தற்போது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை; அவ்வாறு செய்யும் நோக்கமும் இல்லை” என ஹார்முஸ் கட்டுப்பாட்டுக்கான கடிவாளத்தை தன்னிடமே வைத்திருக்கிறது.ஈரான் போர்: கச்சா எண்ணெய்

இதற்கிடையில்தான் ‘லாய்ட்ஸ்லிஸ்ட்’ (Lloyds List) கப்பல் போக்குவரத்து இணையதளம் வெளியிட்டிருக்கும் செய்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஈரானின் புரட்சிகர காவல் படை ஹார்முஸ் ஜலசந்தியில் புதிதாக ‘சுங்கச்சாவடி’ (Toll Booth) முறையை அமல்படுத்தியுள்ளதாக அந்தச் செய்தி தெரிவித்தது.மேலும், அந்தச் செய்தியின் அடிப்படையில், ஈரான் ஏற்கெனவே ஹார்முஸ் ஜலசந்தியில் ஒரு ‘நடைமுறை சுங்கச்சாவடி’ முறையை நடத்தி வருவதாகத் தெரிகிறது.ஜலசந்தியைக் கடக்கும் கப்பல்கள் அவற்றின் சரக்கு விவரங்கள் (manifests), ஊழியர் விவரங்கள் மற்றும் சேருமிடம் ஆகியவற்றை ஈரானின் புரட்சிகர காவல் படையிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் தகவல்கள் ஹார்முஸ்கான் மாகாணக் கட்டளைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டு, அங்கு தடைகள் குறித்த சோதனைகள் மற்றும் சரக்குச் சரிபார்ப்புகள் நடத்தப்படுகின்றன.மார்ச் 13 முதல் சுமார் 26 கப்பல்கள் இந்த முறையைப் பின்பற்றிச் சென்றுள்ளன. அதில் சில கப்பல்களிடம் சீனாவின் ‘யுவான்’ (Yuan) கரன்சியாக கட்டணம் பெறப்பட்டிருக்கிறது. மார்ச் 15-க்குப் பிறகு வழக்கமான பாதையில் பெரும்பாலான கப்பல்களால் பயணிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ராஜேஷ் சின்ஹா

இந்தப் புதிய சுங்கச்சாவடி முறை விவாதமான நிலையில், அந்த வழியே பயணத்தை மேற்கொண்ட இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம், ‘இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருக்கும் ஜக் வசந்த் மற்றும் பைன் கேஸ் உள்ளிட்ட ஐந்து கப்பல்கள் பாதுகாப்பாக இந்த ஜலசந்தியைக் கடந்துள்ளன. இவை வார இறுதிக்குள் இந்தியத் துறைமுகங்களை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஹார்முஸ் நீரிணையில் எந்தச் சுங்கச்சாவடி நடைமுறையும் இல்லை’ என மறுத்துள்ளது.இது குறித்துப் பேசிய அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் சின்ஹா, “சர்வதேச விதிகளின்படி ஹார்முஸ் ஜலசந்தி ஒரு சர்வதேச கடல்வழிப் பாதை. இதில் பயணிக்கக் கட்டணம் ஏதும் வசூலிக்க முடியாது. எனவே, இத்தகைய செய்திகள் ஆதாரமற்றவை” என்று தெரிவித்தார்.இதற்கு விளக்கமளிக்கும் வகையில் பேசிய ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, “இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணிக்க அனுமதி அளித்துள்ளோம்” என்று தெரிவித்தார். மும்பையில் உள்ள ஈரானிய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், ‘சீனா, ரஷ்யா, இந்தியா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் போன்ற நட்பு நாடுகளுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ எனக் கூறப்பட்டுள்ளது.மொஜ்தபா கமேனி

போரினால் ஈரானுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை ஈடுகட்டவும், தன் நாட்டை மீட்டெடுக்கவும் இந்த நீர்வழிப் பாதையை ஈரான் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக சர்வதேச அரசியலை கூர்ந்து கவனித்து வரும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதன் அடிப்படையில், ஈரான் புரட்சிகர காவல் படைக்கு நெருக்கமான ஃபார்ஸ் (Fars) மற்றும் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனங்கள், ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் மொஹம்மத்ரெஜா ரெஜாயி கூச்சியை மேற்கோள் காட்டி செய்தி ஒன்றை வெளியிட்டன.அதில், “ஹார்முஸ் ஜலசந்தியின் மீது ஈரானின் இறையாண்மை, கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வையை அதிகாரப்பூர்வமாக சட்டமாக்கவும், அதன் மூலம் கட்டணம் வசூலித்து வருவாயை உருவாக்கவும் நாடாளுமன்றம் திட்டமிட்டுள்ளது. மற்ற போக்குவரத்து வழித்தடங்கள் வழியாகப் பொருட்கள் செல்லும்போது கட்டணம் செலுத்துவது போலவே, ஹார்முஸ் ஜலசந்தியும் ஒரு வழித்தடம்தான். இந்தப் பகுதியின் பாதுகாப்பை நாங்கள் வழங்குகிறோம், எனவே கப்பல்களும் எண்ணெய் டாங்கர்களும் கட்டணம் செலுத்துவது இயல்பானது” எனக் குறிப்பிட்டிருக்கிறது.அமெரிக்கா – ஈரான்

இதன் அடிப்படையில், ஜலசந்தியைக் கடக்கும் ஒவ்வொரு எண்ணெய் டாங்கர் கப்பலுக்கும் சுங்கவரி விதிக்க ஈரான் ஆலோசித்து வருகிறது. இதற்கான சட்ட மசோதாவை ஈரானிய நாடாளுமன்றம் தயாரித்து வருகிறது. “எங்கள் கடல் பகுதியில் பாதுகாப்பு வழங்குவதற்கு ஈடாகக் கட்டணம் வசூலிப்பது நியாயமானது” என்பது ஈரானின் வாதம். மேலும், இந்த நடைமுறை, தன் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நாடுகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க ஈரானுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தும்.எனவே, ஹார்முஸ் நீரிணை மீதான தனது செல்வாக்கை வெறும் தற்காப்பு நடவடிக்கையாக மட்டுமல்லாமல், வருவாய் ஈட்டுவதற்கான ஒரு நீண்டகால புவிசார் அரசியல் கருவியாக நிறுவனமயமாக்கவும் ஈரான் முயல்கிறது.

ஹார்முஸ் ஜலசந்தி என்பது உலக நாடுகளின் ‘பொருளாதாரக் கழுத்துப்பகுதி’ போன்றது. உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20% இந்தப் பாதை வழியாகத்தான் நடக்கிறது. ஒருவேளை ஈரான் இங்கே அதிகாரப்பூர்வமாகச் சுங்கச்சாவடி அமைத்துக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கினால், அது உலகளவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.பெட்ரோல் விலை

கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்கப்பட்டால், அந்தச் செலவு நுகர்வோர் மீது சுமத்தப்படும். இதனால் சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை அதிரடியாக உயரும். கத்தார் போன்ற நாடுகள் தங்களின் திரவ இயற்கை எரிவாயுவை (LNG) இந்தப் பாதை வழியாகத்தான் ஏற்றுமதி செய்கின்றன. இதனால் சமையல் எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்கள் உலகெங்கும் அதிகரிக்கக்கூடும்.இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80%-க்கும் மேல் இறக்குமதி செய்கிறது. இதில் பெரும்பகுதி ஹார்முஸ் வழியாகவே வருகிறது. ஈரானின் இந்த நடவடிக்கையால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயரும். எரிபொருள் விலை உயர்ந்தால், அத்தியாவசியப் பொருள்களின் போக்குவரத்துச் செலவு அதிகரித்து, காய்கறிகள் முதல் மின்னணு பொருள்கள் வரை அனைத்தின் விலையும் ஏறும். இதனால் விவசாயம் மற்றும் தொழில் உற்பத்தி உலகளவில் மந்தமடையும் அபாயம் உள்ளது.ஹார்முஸ்

சர்வதேசக் கடல் பகுதியில் ஒரு நாடு தன்னிச்சையாகக் கட்டுப்பாடு விதிப்பது, அந்தப் பகுதியை ‘ஆபத்தான பகுதி’ (War Risk Zone) என அறிவிக்க வழிவகுக்கும். இதனால் கப்பல்களுக்கான காப்பீட்டுக் கட்டணம் பல மடங்கு உயரும்; இது ஒட்டுமொத்த கடல்வழி வர்த்தகத்தையும் செலவுமிக்கதாக மாற்றும்.ஐக்கிய நாடுகளின் கடல்சார் சட்ட ஒப்பந்தத்தின்படி (UNCLOS), சர்வதேச ஜலசந்திகளில் கப்பல்கள் தடையின்றிப் பயணிக்க உரிமை உண்டு (Transit Passage). ஈரான் கட்டணம் வசூலிப்பது இந்தச் சர்வதேசச் சட்டத்திற்கு எதிரானது என்பதால், ஐநா சபை மற்றும் சர்வதேச நீதிமன்றத்தில் பெரிய சட்டப் போராட்டங்கள் வெடிக்கும்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் ஈரானின் இந்த ஆதிக்கத்தை ஏற்காது. கப்பல்களைப் பாதுகாக்கத் தங்களின் போர்க்கப்பல்களை அந்தப் பகுதிக்கு அனுப்பும். இது ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே நேரடிப் போர் மூளும் அபாயத்தை உருவாக்கும்.தற்போது சில கப்பல்களிடம் செய்வது போல ஈரான் இந்தக் கட்டணத்தைச் சீனாவின் ‘யுவான்’ கரன்சியில் வசூலிக்கத் தொடங்கினால், அது சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைச் சற்றே குறைத்து, சீனாவின் கரன்சிக்கு உலகளாவிய முக்கியத்துவத்தைக் கொடுக்கும்.ஈரான் போர்சுருக்கமாக சொல்வதானால், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் சுங்கச்சாவடி அமைப்பது என்பது வெறும் பண வசூல் மட்டுமல்ல, அது உலகப் பொருளாதாரத்தின் சாவியைத் தன் கையில் எடுப்பதற்குச் சமம். இதனால் உலகப் பொருளாதாரம் வேறொரு பரிமாணத்தை நோக்கி நகரும்.இந்த நிகழ்வுகள் மூலம், உலக நிகழ்வுகளை வடிவமைப்பதில் ராணுவ பலத்தைப் பயன்படுத்துவதைப் போலவே பணத்தையும் பொருளாதார அழுத்தத்தையும் பயன்படுத்துவது அமெரிக்காவின் உக்தி. அதை இப்போது ஈரானும் கையில் எடுத்திருக்கிறது. இது எந்த வகையில் ஈரானுக்கு பயன்படும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்!

Source link