'ஹிட்மேன்' ரோகித் சர்மா 'ஸ்பெஷல்': மும்பை அணிக்கு முதல் வெற்றி

மும்பை: மும்பை அணி தனது முதல் லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

வருடம் தோறும் கிரிக்கெட் லீக் தொடர் நடக்கிறது. மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் மும்பை, கொல்கட்டா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

ரகுவன்ஷி அரைசதம்: கொல்கட்டா அணிக்கு கேப்டன் அஜின்கியா ரகானே, ஆலன் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ஹர்திக் பாண்ட்யா வீசிய 4வது ஓவரில் ரகானே 2 சிக்சர், ஆலன் 3 பவுண்டரி அடிக்க 26 ரன் கிடைத்தது. முதல் விக்கெட்டுக்கு 69 ரன் சேர்த்த போது ஷர்துல் தாகூர் ‘வேகத்தில்’ ஆலன் (37) வெளியேறினார். அபாரமாக ஆடிய ரகானே (67), 27 பந்தில் அரைசதம் கடந்தார். ஹர்திக் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ரகுவன்ஷி (51), தன்பங்கிற்கு அரைசதம் விளாசினார்.

கொல்கட்டா அணி 20 ஓவரில் 220/4 ரன் எடுத்தது. ரிங்கு சிங் (33), ராமன்தீப் சிங் (4) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை அணி சார்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட் கைப்பற்றினார்.

ரகானே காயம்: சவாலான இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு ரியான் ரிக்கிள்டன், ரோகித் சர்மா ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மாவின் ‘ஸ்பெஷல்’ ஆட்டம் ரசிகர்களை கவர்ந்தது. வைபவ் அரோரா வீசிய 3வது ஓவரில் ரோகித் 1, ரிக்கிள்டன் 2 சிக்சர் பறக்கவிட்டனர். நான்காவது ஓவரின் முடிவில், காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக கொல்கட்டா அணி கேப்டன் ரகானே, ‘பெவிலியன்’ திரும்பினார். துணை கேப்டன் ரிங்கு சிங் அணியை வழிநடத்தினார்.

ரோகித் விளாசல்: வருண் சக்ரவர்த்தி வீசிய 5வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்த ரோகித், கார்த்திக் தியாகி வீசிய 6வது ஓவரில் 2 சிக்சர் விளாசினார். அபாரமாக ஆடிய ரோகித், 23 பந்தில் அரைசதம் கடந்தார். இது, இத்தொடரில் இவரது 50வது 50+ ஸ்கோரானது. மறுமுனையில் அசத்திய ரிக்கிள்டன், சுனில் நரைன் வீசிய 9வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட, 25 பந்தில் அரைசதத்தை எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 148 ரன் சேர்த்த போது அரோரா பந்தில் ரோகித் (78 ரன், 6X6, 6X4) அவுட்டானார்.

ரிக்கிள்டன் அபாரம்: சூர்யகுமார் யாதவ் (16) நிலைக்கவில்லை. ரிக்கிள்டன் (81 ரன், 8X6, 4X4) ‘ரன்-அவுட்’ ஆனார். பின் இணைந்த திலக் வர்மா, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி கைகொடுத்தது. நான்காவது விக்கெட்டுக்கு 31 ரன் சேர்த்த போது நரைன் ‘சுழலில்’ திலக் வர்மா (20) சிக்கினார். அனுகுல் ராய் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய நமன் திர் வெற்றியை உறுதி செய்தார்.

மும்பை அணி 19.1 ஓவரில் 224/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பாண்ட்யா (18), நமன் திர் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

முற்றுப்புள்ளி

கடந்த 2012ல் நடந்த 5வது சீசனில், மும்பை அணி தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றது. அதன்பின் விளையாடிய 13 சீசனின் (2013-25) முதல் போட்டியில் தோற்றது. இத்தோல்விக்கு நேற்று முற்றுப்புள்ளி வைத்தது.

சிறந்த ‘சேஸ்’

கிரிக்கெட் லீக் தொடரில் மும்பை அணி, தனது சிறந்த ‘சேஸ்’ வெற்றியை (224/4) பதிவு செய்தது. இதற்கு முன், 2021ல் டில்லியில் நடந்த சென்னைக்கு எதிரான போட்டியில் 219/6 ரன்னை விரட்டியது.

23 பந்தில்

கிரிக்கெட் லீக் அரங்கில் மும்பையின் ரோகித் சர்மா, தனது அதிவேக அரைசதத்தை (23 பந்தில்) பதிவு செய்தார். இதற்கு முன், 2015ல் நடந்த சென்னைக்கு எதிரான பைனலில் 25 பந்தில் அரைசதம் அடித்திருந்தார்.

300வது போட்டி

மும்பை அணி தனது 300வது போட்டியில் (கிரிக்கெட் லீக்-278, சாம்பியன்ஸ் லீக்-22) விளையாடியது. ஒட்டுமொத்த ‘டி-20’ வரலாற்றில் 300 அல்லது அதற்கு மேலான போட்டிகளில் பங்கேற்ற 3வது அணியானது மும்பை. ஏற்கனவே இங்கிலாந்தின் சாமர்செட், பாகிஸ்தான் அணிகள் தலா 303 போட்டியில் விளையாடி உள்ளன.

நரைன் ‘190’

கிரிக்கெட் லீக் தொடரில், அதிக போட்டிகளில் விளையாடிய வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் சுனில் நரைன் (190 போட்டி) முதலிடம் பிடித்தார். அடுத்த மூன்று இடங்களில் வெஸ்ட் இண்டீசின் போலார்டு (189 போட்டி), தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் (184), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (184) உள்ளனர்.

Source link