ஹபூர்: பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்புடைய கும்பலுக்கு ஹிந்து கோவில்கள், முக்கிய இடங்கள் பற்றிய தகவலை ஆன்லைன் மூலம் பகிர்ந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
உ.பி.,யை சேர்ந்த இருவர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யுடன் தொடர்புடைய நபருடன், ‘வாட்ஸாப்’ உள்ளிட்ட சமூகவலை தளங்கள் மூலம் தொடர்பில் இருப்பதாக நம் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நம் உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ஹபூர் மாவட்டம் தவுலானா பகுதியில் இருந்து சந்தேகத்திற்குரிய இருவரை கைது செய்தனர்.
விசாரணை
அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒருவர் தவுலானா அருகேயுள்ள பீப்லிஹ்டாவை சேர்ந்த அசீம் ரானா என்பதும், மற்றொருவர் மீரட் மாவட்டம் ஜெய் கிராமத்தை சேர்ந்த ஆசாத் ராஜ்புத் என்பதும் தெரியவந்தது.
இது குறித்து விசாரணை நடத்திய போலீஸ் எஸ்.பி., குன்வார் ஞானஜெய் சிங் கூறியதாவது: கைதான ரானா மற்றும் ராஜ்புத் ஆகிய இருவரும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யுடன் தொடர்புடைய சாஜாத் பாட்டி என்பவருடன் கடந்த 2025 டிசம்பர் முதல் சமூகவலை தளம் மூலம் தொடர்பில் இருந்து உள்ளனர்.
மேற்கு டில்லி மெட்ரோ ரயில் நிலைய பகுதியில் உள்ள கோவில் மற்றும் முக்கிய இடங்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் அது அமைந்துள்ள இடங்கள் குறித்த விபரங்களை பாக்., கும்பலுக்கு இருவரும் வாட்ஸாப்பில் அனுப்பியுள்ளனர்.
தாக்குதல்
இதே போல் கிரேட்டர் நொய்டாவில் உள்ள பிஸ்ராக் பகுதி கோவில் பற்றிய தகவல்களையும் பாக்.,கிற்கு அனுப்பி உள்ளனர். எனவே, அவர்கள் கோவில்களை தாக்க சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். கடந்த காலங்களை போல் பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்த இந்த தகவல் அளிக்கப்பட்டதா என விசாரணை நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
