திருப்பூர்: தி.மு.க., அரசு, ஹிந்து கோவில்கள் மீது பாரபட்சம் காட்டிவருவதாக ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: ரம்ஜான் நோன்புக்காக, பள்ளி வாசல்களுக்கு 8,700 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்படும் என தி.மு.க. அரசு, அறிவித்துள்ளது. இதனால், 20 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். இந்தாண்டு வழக்கத்தை விட, அதிகமாக ஒதுக்கீடு செய்துள்ளது.
தி.மு.க. வின், 2021ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், ஹிந்து கோவில்களின் பராமரிப்புக்காக, ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த நிதி, இன்று வரை ஒதுக்கப்படவில்லை.
பல கோவில்களில், முறையாக பராமரிப்பு பணிகளை செய்யாமல், அவசர கதியில் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. பக்தர்கள் வசதிக்காக எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தருவதில்லை. தி.மு.க. அரசுக்கு, ஹிந்து கோவில்களை பற்றி எந்த கவலையும் இல்லை.
ஆனால், கிறிஸ்தவர்களின் தேவாலயங்கள் மற்றும் இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்களை புனரமைக்க, முதல்வர் ஸ்டாலின், 20 கோடி ரூபாய் ஒதுக்குகிறார். 17 ஆயிரம் ஹிந்து கோவில்களில் ஒரு வேளை பூஜை செய்ய கூட வசதியில்லை என, தமிழக அரசே கோர்ட்டில் ஒப்புக்கொள்கிறது. ஆனால், கோவில்கள் வாயிலாக வரும் வருமானத்தை மட்டும் எடுத்து கொள்கிறது.
சட்டசபை தேர்தல் வருவதால், இஸ்லாமியர் ஓட்டுகளை பெறுவது ஒன்றே தி.மு.க.வின் திட்டம் என்பது வெட்டவெளிச்சமாகிறது. நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை ஹிந்து சமுதாயம், தனது ஓட்டுவங்கியின் வாயிலாக, தி.மு.க. அரசுக்கு தக்க பதிலடி தரும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
