ஹீரோ' ஹாரி புரூக் சதம் * இங்கிலாந்திடம் வீழ்ந்தது பாக்.,

பல்லேகெலே: ‘டி-20’ உலக கோப்பை ‘சூப்பர்-8’ போட்டியில், இங்கிலாந்து அணி, 2 விக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தியது. முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. ஹாரி புரூக் சதம் அடித்தார்.

இலங்கையின் பல்லேகெலே மைதானத்தில் நேற்று நடந்த, ‘டி-20’ உலக கோப்பை ‘சூப்பர்-8’ சுற்று, ‘பி’ பிரிவு போட்டியில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

பர்ஹான் அபாரம்

பாகிஸ்தான் அணிக்கு சாகிப்ஜதா பர்ஹான், சைம் அயுப் ஜோடி துவக்கம் தந்தது. ஆர்ச்சர் வீசிய 3வது ஓவரில் அயுப் (7) அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் சல்மான் அகா, 5 ரன் மட்டும் எடுத்த நிலையில், டாசன் சுழலில் சிக்கினார். பாகிஸ்தான் அணி 10 ஓவரில் 70/2 ரன் மட்டும் எடுத்தது.

மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனுபவ பாபர் ஆசம் (24 பந்தில் 25 ரன்), ஓவர்டன் பந்தில் போல்டானார். இதன் பின் அணியின் ரன்வேகம் அதிகரித்தது. வில் ஜாக்ஸ் வீசிய 14வது ஓவரில் பர்ஹான், பகர் ஜமான் தலா ஒரு சிக்சர் அடிக்க, 16 ரன் கிடைத்தன. பர்ஹான் 37 பந்தில் அரைசதம் எட்டினார். ‘டி-20’ உலக தொடரில் இவர் அடித்த 3வது அரைசதம் இது.

பர்ஹான் 45 பந்தில் 63 ரன் எடுத்த போது, ஓவர்டன் வெளியேற்றினார். சிறிது நேரத்தில் பகர் ஜமான் (25), அடில் ரஷித் சுழலில் வீழ்ந்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 164/9 ரன் எடுத்தது. இங்கிலாந்தின் டாசன் 3 விக்கெட் சாய்த்தார்.

திணறல் துவக்கம்

இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் (0), பட்லர் (2) ஜோடி துவக்கத்தில் அதிர்ச்சி கொடுத்தது. பெத்தெல் (8), பான்டன் (2) கைவிட்ட போதும், கேப்டன் ஹாரி புரூக், அரைசதம் அடித்தார். கர்ரான் 16 ரன்னில் திரும்பினார்.

மறுபக்கம் மனம் தளராமல் போராடினார் புரூக். அப்ரிதி ஓவரில் (17) அடுத்தடுத்து சிக்சர், பவுண்டரி அடித்த புரூக் (100 ரன், 51 பந்து), சதம் எட்ட, வெற்றி எளிதானது. இங்கிலாந்து அணி 19.1 ஓவரில் 166/8 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

முதலில் இலங்கை, நேற்று பாகிஸ்தான் என அடுத்தடுத்து இரு போட்டியில் வென்ற இங்கிலாந்து (4 புள்ளி) அரையிறுதிக்கு முன்னேறியது.

Source link