ஹூஸ்டன்: நிலவை சுற்றி வர விண்வெளி வீரர்களுடன், ‘நாசா’வால் அனுப்பப்பட்டுள்ள, ‘ஆர்டெமிஸ் – 2’ விண்கலத்தின் வீரர்கள், 4 லட்சம் கி.மீ., துாரத்தை கடந்து விண்வெளியில் அதிக துாரம் சென்றவர்கள் என்ற சாதனையை படைக்க உள்ளனர்.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, 1972ல், ‘அப்போலோ 17’ விண்கலம் மூலம் நிலவை நோக்கி மனிதர்களை அனுப்பியது.
அதன்பின் நிறைய விண்கலம் நிலவுக்கு சென்றாலும், மனிதர்களுடன் எந்த விண்கலமும் செல்லவில்லை.
இந்நிலையில், 53 ஆண்டுகளுக்கு பின், ஆர்டெமிஸ் 2 எனும் விண்கலம் நான்கு விண்வெளி வீரர்களுடன், கடந்த 2ல் அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து புறப்பட்டது. ஆனால், இந்த விண்கலம் நிலவில் தரையிறங்காது; அதை சுற்றி வரும்.
நேற்று காலை நிலவரப்படி, நிலவின் துாரமான 4 லட்சம் கி.மீ.,யில் பாதியை, ‘ஆர்டெமிஸ் – 2’ கடந்துள்ளது. நாளை காலை நிலவின் வட்டப்பாதையை ஆர்டெமிஸ் எட்ட உள்ளது.
இதற்கு முன், மனிதர்களுடன் சென்ற அப்போலோ 17 விண்கலம், 4.17 லட்சம் கி.மீ., துாரம் சென்று பூமிக்கு திரும்பியது. ‘ஆர்டெமிஸ் – 2’ விண்கலம் இதையும் கடந்து சென்று திரும்ப உள்ளது.
இதன் மூலம் விண் வெளியில் அதிக துாரம் பயணித்தவர்கள் என்ற சாதனையை, ‘ஆர்டெமிஸ் – 2’ வீரர்கள் எட்ட உள்ளனர். இதில் பயணிக்கும் விக்டர் க்ளோவர் என்ற அமெரிக்க வீரர், “பூமி மிகவும் சிறியதாக தெரிகிறது; நிலவு பெரிதாகிக் கொண்டிருக்கிறது,” என்றார்.
