ஹெ ச்.டி.எப்.சி., வங்கி பங்குகள் நேற்று பங்குச் சந்தையில் பெரும் சரிவை சந்தித்தன. வங்கியின் தலைவர் அதானு சக்ரவர்த்தி தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்ததே, இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
ராஜினாமாவின் பின்னணி:
அதானு சக்ரவர்த்தி தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ள காரணங்கள் சாதாரணமானவை அல்ல. “கடந்த இரண்டு ஆண்டுகளாக வங்கியில் நடந்து வரும் சில நிகழ்வுகள் மற்றும் நடைமுறைகள், எனது தனிப்பட்ட மதிப்புகள் மற்றும் கொள்கைகளுக்கு முரணாக உள்ளன.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வங்கியின் நிர்வாக தரம் குறித்து அவர் எழுப்பியுள்ள இந்த கேள்வி, முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தி வெளியானதையடுத்து, ஹெச்.டி.எப்.சி., வங்கி பங்குகள் நேற்று வர்த்தக துவக்கத்தில் கிட்டதட்ட 9 சதவீதம் சரிந்தன. வர்த்தக நிறைவில் 5.32 சதவீதம் சரிந்து, ஒரு பங்கின் விலை 798.20 ரூபாயில் நிறைவடைந்துள்ளது.
நேற்றைய வர்த்தகத்தின் இடையில் ஹெச்.டி.எப்.சி., வங்கியின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வீழ்ச்சியடைந்தது.
ரிசர்வ் வங்கியின் வகைப்பாட்டின்படி, எஸ்.பி.ஐ., மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிகளை போலவே , ஹெச்.டி.எப்.சி ., வங்கியும் வீழ்ச்சியடைய முடியாத அளவுக்கு பெரிய நிறுவனம் என்ற பிரிவில் உள்ளது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வங்கியின் தலைவரே நிர்வாக குறைபாடுகளை சுட்டிக்காட்டி விலகியிருப்பது, சந்தையில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.
