ஹெச்.டி.எப்.சி., வங்கி விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை வேண்டும்

மும்பை: ஹெச்.டி.எப்.சி., வங்கி தலைவராக இருந்த அதானு சக்ரவர்த்தியின் ராஜினாமா பின்னணி குறித்து விசாரணை நடத்துமாறு, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் கோரியுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அந்த சங்கம் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

ரிசர்வ் வங்கியால், ‘முக்கியத்துவம் வாய்ந்த உள்நாட்டு வங்கி’ என்று வகைப்படுத்தப்பட்டது ஹெச்.டி.எப்.சி., வங்கி. அதன் நிர்வாக தரம், ஒழுங்காற்று விதிகளை பின்பற்றுவது, நிலைத்தன்மை ஆகியவை தொடர்பான கவலையளிக்கும் கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

ஒரு வங்கியின் தலைவர், அதன் நெறிமுறைகள் குறித்து புகார் தெரிவித்திருப்பது வழக்கத்துக்கு மாறானது. எனவே, அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.

இந்த விஷயத்தில், சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என சி.பி.ஐ., அல்லது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் வாயிலாக விரிவாக விசாரிக்க வேண்டும்.

டிபாசிட்தாரர்களின் நம்பிக்கையை பெறும் வகையில் விசாரணை முடிவுகள், பொது வெளியில் பகிரங்கமாக வெளியிடப்பட வேண்டும்.

உரிய பார்லி., குழுக்களும் இந்த விவகாரத்தை ஆய்வு செய்ய வேண்டும். ஹெச்.டி.எப்.சி., வங்கியின் 12 கோடி வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், பொதுமக்களின் நம்பிக்கை பாதுகாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஹெச்.டி.எப்.சி., வங்கியின் தலைவராக இருந்த அதானு சக்ரவர்த்தி, அவ்வங்கியின் செயல்பாடுகள், அறநெறிகளுக்கு முரணாக இருப்பதாகக் கூறி, மார்ச் 18ல் ராஜினாமா செய்தார்.

Source link