ஹைதராபாத்: தெலுங்கானாவில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், ஆளும் காங்., அமோக வெற்றி பெற்றுள்ளது.

ஹைதராபாத்: தெலுங்கானாவில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், ஆளும் காங்., அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள, 116 நகராட்சிகள் மற்றும் ஏழு மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில், 67 நகராட்சிகளையும், நான்கு மாநகராட்சிகளையும் அக்கட்சி கைப்பற்றி உள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் தன் செல்வாக்கை முதல்வர் ரேவந்த் ரெட்டி மீண்டும் நிரூபித்துள்ளார்.

தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. மொத்த முள்ள, 116 நகராட்சிகள் மற்றும் 7 மாநகராட்சிகளுக்கு, கடந்த 11ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில், 67 நகராட்சிகளையும், நான்கு மாநகராட்சிகளையும் கைப்பற்றி காங்., அமோக வெற்றி பெற்றுள்ளது.

வெற்றி வாகை

தெலுங்கானாவில் இரண்டு முறை ஆட்சியில் இருந்த பிரதான எதிர்க்கட்சியான முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ்., எனப்படும் பாரத் ராஷ்டிர சமிதி, உள்ளாட்சி தேர்தலில் இம்முறை சோபிக்கவில்லை.

வெறும் 13 நகராட்சி களை மட்டுமே கைப்பற்றி உள்ளது. மாநகராட்சிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.

மற்றொரு எதிர்க்கட்சியான பா.ஜ.,வும் பெரியளவில் ஜொலிக்கவில்லை. அதே சமயம், யாரும் எதிர்பார்க்காத வகையில், கரீம்நகர் மாநகராட்சியை பா.ஜ., தன்வசப்படுத்தி உள்ளது. தனி பெருங்கட்சியாக உருவெடுத்து, ஆளுங்கட்சிக்கு சவால் விடுத்து உள்ளது.

நிஜாமாபாத் மாநகராட்சியை ஏ.ஐ.எம்.ஐ.எம்., உடன் கூட்டணி வைத்து காங்., கைப்பற்றியது. அதேபோல், இ.கம்யூ., உடன் கைகோர்த்து, கெத்தகுடெம் மாநகராட்சியில் காங்., வெற்றி வாகை சூடியுள்ளது.

அதிருப்தி

மஹ்பூப்நகர், மன்சேரியல், நல்கொண்டா, ராமகுண்டம் ஆகிய நான்கு மாநகராட்சிகளை கைப்பற்றி காங்., சாதித்து உள்ளது. ஹைதராபாத் மாநகராட்சிக்கு மட்டும் இம்முறை தேர்தல் நடத்தப்படவில்லை.

வார்டு அளவில் பொறுத்தவரை, 2,996 இடங்களில், 1,537 வார்டுகளில் காங்., வெற்றி பெற்றுள்ளது. பி.ஆர்.எஸ்., 780; பா.ஜ., 335; ஏ.ஐ.எம்.ஐ.எம்., 70 வார்டு களை வென்றுஉள்ளன.

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியான போதே, டில்லிக்கு பறந்த முதல்வர் ரேவந்த் ரெட்டி, காங்., – எம்.பி., பிரியங்காவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் காரண மாகவே இந்த வெற்றி சாத்தியமானதாக, பிரியங்காவிடம் அவர் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் குறித்து, சமூக வலைதளத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி வெளியிட்ட பதிவில், ‘இரண்டு ஆண்டு கால மக்களை மையப்படுத்திய ஆட்சிக்கு கிடைத்த வெற்றி இது. அதை உறுதி செய்யவே மக்கள் காங்கிரசுக்கு ஓட்டளித்தனர்’ என, குறிப்பிட்டார்.

அதே சமயம், ‘ஆளும் காங்., அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தேர்தலில், அந்த அதிருப்தி வெகுவாக எதிரொலித்தது’ என, பி.ஆர்.எஸ்., செயல் தலைவர் கே.டி.ராமா ராவ் விமர்சித்துள்ளார்.

தேர்தல் முடிவு: ராகுல் கருத்து உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து, காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியதாவது: மக்களை மையப்படுத்திய கொள்கையால் காங்., அரசுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது. சமூக நீதி, உள்ளடக்கிய வளர்ச்சியில் தெலுங்கானா காங்., அரசு அதீத கவனம் செலுத்தியது. அதற்காகவே, மக்கள் இந்த வெற்றியை பரிசளித்துள்ளனர். வெற்றிக்காக பாடுபட்ட காங்., தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி. ‘மக்கள் தெலுங்கானா’ என்ற திட்டம் ஒவ்வொரு குடும்பத்தையும் சென்றடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ‘காங்., மீது மக்கள் வைத்த நம்பிக்கை உள்ளாட்சி தேர்தலில் எதிரொலித்துள்ளது’ என, கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

முத்திரை பதிக்கும் ரேவந்த் ரெட்டி

தெலுங்கானாவில், கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த ஜூப்ளி ஹில்ஸ் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்., வெற்றி பெற்றது. பி.ஆர்.எஸ்., வசமிருந்த தொகுதியை கைப்பற்றி காங்., சாதித்தது. தொடர்ந்து, டிசம்பரில் கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதிலும் பெரும்பாலான இடங்களை காங்., கைப்பற்றியது. அடுத்தடுத்த வெற்றிகளால், கட்சி மேலிடத்தின், ‘குட் புக்’கில் இடம் பெற்றார் முதல்வர் ரேவந்த் ரெட்டி. மேலும், மாநிலத்தில் தனக்கென தனி அரசியல் முத்திரையை பதித்தார். இந்த உற்சாகத்தோடு, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் நடத்தி, அதிலும் அவர் வெற்றி கண்டுள்ளார். தொடர் வெற்றிகளால், கட்சி மேலிடத்தின் நற்பெயரை சம்பாதித்து வரும் அவர், தவிர்க்க முடியாத தலைவராகவும் உருவெடுத்துள்ளார்.

Source link