ஹைதராபாத்: தெலுங்கானாவில், ‘ஆன்லைன்’ சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் செயலிகளை விளம்பரம் செய்த, 124 சமூக வலைதள கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
தெலுங்கானாவில் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன. இது போன்ற செயலிகளை பயன்படுத்துவதும், அவற்றை விளம்பரம் செய்வதும் தண்டனைக்குரிய குற்றம்.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு சமூக வலைதளங்களை சேர்ந்த 124 கணக்குகள், 500க்கும் மேற்பட்ட ஆன்லைன் சூதாட்டம் தொடர்புடைய விளம்பரங்களை வெளியிட்டிருந்தன.
அதில், வீட்டிலிருந்த படியே பணம் சம்பாதிக்கலாம், உறுதியான வருமானம், போனஸ், பரிந்துரை கமிஷன் போன்ற கவர்ச்சிகர வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன.
குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து, இந்த விளம்பரங்களை வெளியிட்ட கணக்குகள் குறித்து சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அனைத்து கணக்குகளும் நீக்கப்பட்டுள்ளன.
இந்த கணக்குகளை இயக்கியவர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிதி பரிவர்த்தனை வழிகளை கண்டறிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
