௶'வெனிசுலா எண்ணெய் இறக்குமதி ஆண்டுக்கு ரூ.27,300 கோடி லாபம்'

-புதுடில்லி: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு பதிலாக, வெனிசுலாவிலிருந்து வாங்கினால், இந்தியாவுக்கு ஆண்டுக்கு சுமார் 27,300 கோடி ரூபாய் வரை செலவு குறையும் என்று எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை கூறியுள்ளது.

மேலும் அது தெரிவித்துள்ளதாவது:

இந்தியா, கச்சா எண்ணெய்க்கு ரஷ்ய இறக்குமதி சார்பை குறைத்து, வெனிசுலாவின் அடர்த்தியான கச்சா எண்ணெய்க்கு மாறுவதால், கணிசமான பொருளாதார நன்மைகள் கிடைக்கும்.

வெனிசுலாவின் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 910 ரூபாய் முதல் 1,092 ரூபாய் வரை விலை குறைவாக கிடைத்தால் தான், இந்திய இறக்குமதியாளர்களுக்கு கட்டுப்படியாகும். ஏனெனில், அதற்கு சுத்திகரிப்பு செலவு அதிகம்.

அத்தகைய தள்ளுபடி விலையில் கிடைத்தால், இந்தியாவின் இறக்குமதி செலவு 27,300 கோடி ரூபாய் வரை குறையும். ஆனால், கூடுதலாக ஏற்படும் போக்குவரத்து கட்டணம் மற்றும் இதர கையாளுதல் செலவுகளை ஈடுகட்டும் வகையில் விலை இருந்தால்தான் இந்தியாவுக்கு அது பயனளிக்கும்.

இன்றைய நிலையில், வெனிசுலாவின் அடர் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 4,641 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ரஷ்யாவின் அடர்த்தி குறைந்த கச்சா எண்ணெயிலிருந்து, வெனிசுலாவின் அடர் கச்சா எண்ணெய்க்கு மாறுவதற்கு ஆகும் செலவுகளை நிர்ணயம் செய்வதில் தள்ளுபடிகள், கப்பல் பயண தொலைவு, நேரம், காப்பீட்டு செலவு ஆகியவை முக்கிய பங்கு வகிக்கும்.

இந்தியாவுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையிலான கடல் பயண துாரத்தைவிட 5 மடங்கு தொலைவிலும், ரஷ்யாவைவிட 2 மடங்கு துாரத்திலும் வெனிசுலா இருக்கிறது. இதன் காரணமாக, வெனிசுலாவில் இருந்து இறக்குமதிக்கு கூடுதல் செலவு ஆகும்.

Source link