சென்னை: தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவுப் பணியாளர்கள் நேற்றுமுன்தினம் முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநிலம் முழுதும் நேற்று இரண்டாம் நாளாக, 20,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள், வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால், தமிழகம் முழுதும் 1,000க்கும் மேற்பட்ட, சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டன. சென்னையில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட, 500க்கும் மேற்பட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் தமிழகம் முழுதும் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். சத்துணவு ஊழியர்கள் போராட்டத்திற்கு, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, ‘ஆக்டோ ஜியோ’ ஆதரவு தெரிவித்துள்ளது.
100 சதவீதம் உணவு வினியோகம்
சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தையொட்டி, நேற்று மாநிலம் முழுதும் 1,000க்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள் மூடப்பட்ட நிலையில், காலை உணவுத் திட்ட பணியாளர்கள், அருகில் உள்ள மையங்கள் வழியே மாணவர்களுக்கு, 100 சதவீதம் உணவு வினியோகம் செய்யப்பட்டதாக, சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
