– நமது நிருபர் –
தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட, 1,071 டாக்டர்களில், 320 பேர் பணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அதேநேரம், வேறு காலி பணியிடங்கள் இல்லை என்று அரசு கூறுவதால், மீதமுள்ள, 751 பேரை பணியில் சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, 1,100 உதவி டாக்டர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை, கடந்தாண்டு நவம்பர், 21ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வு இவ்வாண்டு ஜனவரி, 25ல் நடந்தது. அந்த தேர்வில், 20,867 பேர் பங்கேற்றனர்; அவர்களில், 16,986 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் இறுதியாக,, 1,071 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களை கலந்தாய்வு வாயிலாக நிரப்புவதற்கான பணிகள் கடந்த வாரம் துவங்கின. முதல்நாள் கலந்தாய்வுக்கு, 100 பேர் அழைக்கப்பட்டனர். அதில், பணியிடங்களை தேர்வு செய்தவர்களுக்கான ஆணையை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார்.
மறுநாள், 101 முதல் 320 எண் வரையிலான நபர்கள் அழைக்கப்பட்டு, அவர்களுக்கும் பணி ஆணை வழங்கப்பட்டது. இதுவரை, 320 பேருக்கு மட்டுமே கலந்தாய்வு நடந்து ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் உள்ளவர்களுக்கு, இதுவரை கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு வரவில்லை; அவர்களுக்கு பணி வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து, கலந்தாய்வுக்கு காத்திருக்கும் டாக்டர்கள் கூறியதாவது: அரசு முதலில், 1,100 பணியிடம் என்று அறிவித்தது. பின், 1,071 ஆக குறைத்தது. இவற்றையும் முழுமையாக நிரப்ப முயற்சிக்கவில்லை. முதல் இரண்டு நாள் கலந்தாய்வில், 200க்கும் குறைவான இடங்கள் காலியாக இருப்பதாகவே காட்டியுள்ளது.
அதேநேரம், வரிசை எண், 320க்கு பின் உள்ள எங்களை இதுவரை அழைக்கவில்லை. பொது சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டால், ‘காலி பணியிடங்கள் இல்லை. காலி பணியிடத்திற்கு ஏற்ப, உங்களை நியமிப்பர்’ என்கின்றனர்.
எங்கள் சீனியர் டாக்டர்களிடம் கேட்டால், காலிப்பணியிடங்கள் அதிகம் உள்ளதாக சொல்கின்றனர். இதற்கிடையே, தேர்தல் அறிவிப்பு வந்து விட்டதால், அதை காரணம் காட்டி, எங்களுக்கு பணி வழங்காமல் அப்படியே கிடப்பில் போடவும் வாய்ப்பு உள்ளது. அரசு பணி கிடைக்கும் என, ஐந்து மாதங்களுக்கு மேலாக படித்து தேர்ச்சி பெற்று தேர்வு செய்யப்பட்டும் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகையில், ”அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலான பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. காலி பணியிடங்கள் பெரிய அளவில் இல்லை. தேர்வு செய்யப்பட்டவர்கள் நிச்சயம் காலி பணியிடத்திற்கு ஏற்ப நிரப்பப்படுவர்,” என்றார்.
