சென்னையைத் தளமாகக் கொண்டு இயங்கும் ரிபெக்ஸ் குரூப் (Refex Group) என்ற பன்னோக்கு நிறுவனம் தனது 12 ஊழியர்களுக்கு ஆடி ஏ4 (Audi A4) ரக சொகுசு கார்களைப் பரிசாக வழங்கியிருக்கிறது. எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் பல்வேறு துறைகளில் கால்பதித்துள்ள இந்த நிறுவனம், தனது ஊழியர்களின் கடின உழைப்பையும், நிறுவனத்தின் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பையும் கௌரவிக்கும் விதமாக `Wheel of Achievement’ என்று பெயரில் இதனைச் செய்துள்ளார்கள்.
பொதுவாக இதுபோன்ற உயரிய பரிசுகள் நிறுவனத்தின் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். ஆனால், இந்த நிறுவனம் நீண்ட காலமாக நிறுவனத்துடன் பயணிக்கும் ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த பணியாளர்களைத் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளது. பதவி நிலையைத் தாண்டி, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
சந்தை மதிப்பில் சுமார் 47 லட்சம் ரூபாய் முதல் 56 லட்சம் ரூபாய் வரை (Ex-showroom) உள்ள இந்த ஆடி ஏ4 கார்கள் வழங்கப்பட்டபோது, ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து பெற்றுக்கொண்டு தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.
ஒரு இந்திய நிறுவனம் தனது லாபத்தின் ஒரு பகுதியை நேரடியாக ஊழியர்களின் ஆடம்பரத் தேவைகளுக்காகச் செலவிடுவது, அந்த நிறுவனம் எவ்வளவு நிலையான வளர்ச்சியில் (Sustainable Growth) இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கூறுகையில், “ஊழியர்கள் தான் எங்களின் மிகப்பெரிய பலம். அவர்களின் உழைப்பைக் கொண்டாடுவதும், அவர்களை ஊக்குவிப்பதும் எங்களின் கடமை” எனத் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்தச் செய்தி, `கடினமாகவும் நம்பிக்கையுடனும் உழைத்தால் அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும்’ என்பதையும் சொல்கிறது.
