12 வகுப்பு பொதுத்தேர்வு: பிறந்து 10 நாள் கைக்குழந்தையுடன் தேர்வு எழுதிய 21வயது மாணவிக்கு பாராட்டு

நாந்தேட்: மஹாராஷ்டிராவில் தனது 10 நாள் கைக்குழந்தையுடன் வந்து 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 21 வயது மாணவி ஷீத்தல் சந்திரகாந்த் சிட்டே பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

மஹாராஷ்டிராவில் 12 பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று(பிப்ரவரி 19) நாந்தேட் மாவட்டத்தில் உள்ள பீப்பிள்ஸ் கல்லுாரி தேர்வு மையத்தில் ஷீத்தல் சந்திரகாந்த் சிட்டே, பிறந்து 10 ஆன கைக்குழந்தையுடன் அரசியல் அறிவியல் தேர்வு எழுத வந்திருந்தார். தாயும், குழந்தையும் சிரமப்படக்கூடாது என்பதை மனதில்கொண்டு தேர்வு மையத்தில் பிரத்யேக அறை ஒதுக்கப்பட்டது. அந்த அறையில் ஒரு தொட்டில் வைக்கப்பட்டு, குழந்தை உறங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவர் குழந்தை பிறந்த இரண்டாம் நாளிலேயே (பிப்ரவரி 10) தனது ஆங்கிலத் தேர்வை எழுதியது குறிப்பிடத்தக்கது. கணவர் வேலைக்குச் சென்றதால் குழந்தையைப் பார்த்துக் கொள்ள யாரும் இல்லாத சூழலில், அவர் குழந்தையைத் தேர்வு மையத்திற்கே அழைத்து வந்துள்ளார்.

இந்த மாணவியின் கல்வி ஆர்வத்தைப் பாராட்டிய கல்வி அதிகாரிகள் , எதிர்காலத்தில் மற்ற மாணவியருக்கும் இது ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

Source link