பெங்களூரு: பெங்களூருவில் நேற்று முன் தினம் நடந்த கிரிக்கெட் லீக் போட்டியில், ‘நடப்பு சாம்பியன்’ பெங்களூரு அணி, ஐதராபாத்தை வீழ்த்தியது. பெங்களூரு அணிக்கு அனுபவ விராத் கோலி, 37, அசத்தினார். 38 பந்தில் 69* ரன் (5X6, 5X4) விளாசினார். இத்தொடரில் ‘சேஸ்’ செய்த போது 4000 ரன் குவித்த முதல் வீரரானார். இதுவரை 125 இன்னிங்சில், 4027 ரன் எடுத்துள்ளார். அடுத்த இரு இடங்களில் வார்னர் (3285 ரன், 97 இன்னிங்ஸ்), ரோகித் சர்மா (3238 ரன், 129 இன்னிங்ஸ்) உள்ளனர்.
2025ல் பெங்களூரு அணி கோப்பை வென்ற போது பைனலில் விளையாடினார் கோலி. 10 மாதங்களுக்கு பின் களமிறங்கிய போதும், தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இது பற்றி கோலி கூறுகையில்,”15 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடியுள்ளேன். இந்த அனுபவம் கைகொடுக்கும். எனக்கு கிடைக்கும் சிறிய ‘பிரேக்’ அல்லது ‘ரெஸ்ட்’ மனதளவில் புத்துணர்ச்சி பெற உதவுகிறது. மீண்டும் களமிறங்கும் போது 120 சதவீத திறமை வெளிப்படுத்த தயாராக இருப்பேன். போட்டி இல்லாத காலத்தில் உரிய பயிற்சி மேற்கொள்வேன். முழு உடற்தகுதியுடன் உள்ளேன். உடல், மனதளவில் தயாராக இருக்கும் வரை, அணிக்காக சாதிக்கலாம்,”என்றார்.
பெங்களூரு கேப்டன் ரஜத் படிதர் கூறுகையில்,”தொடரை வெற்றியுடன் துவக்கியது மகிழ்ச்சி. எந்த ஒரு இலக்கையும் ‘சேஸ்’ செய்வதில் கோலி சிறந்தவர். இதனால் தான் ‘சேஸ் மாஸ்டர்’ என்று அழைக்கின்றனர். அவரது பேட்டிங் மிகவும் பிடிக்கும். மறுமுனையில் இருந்து அவரது ஆட்டத்தை காண்பது சிறப்பான அனுபவம்,”என்றார்.
