13 ஆண்டுகளாக கோமாவில் வாழும் இளைஞர் கருணை கொலைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி

-டில்லி சிறப்பு நிருபர்-: உத்தர பிரசேத்தின் காஜியாபாதைச் சேர்ந்த, 31வயது இளைஞர், 13 ஆண்டுகளாக கோமாவில் உள்ள நிலையில், அவருக்கு பொருத்தப்பட்ட உயிர் காக்கும் கருவிகளை அகற்றி, கருணை கொலைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதுபோன்ற அனுமதி அளிக்கப்படுவது, நம் நாட்டில் இதுவே முதல்முறை.

உ.பி.,யின் காஜியாபாதைச் சேர்ந்த ஹரீஷ் ராணா, கடந்த 2013ல் பஞ்சாப் பல்கலையில் படித்தார். அவர் தங்கி இருந்த விடுதியின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் படுகாயம்அடைந்தார்.

அவருக்கு மூளையில் காயம் ஏற்பட்டது. தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டும், எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் 13 ஆண்டுகளாக கோமா நிலையிலேயே உயிர் வாழ்ந்து வருகிறார்.

நீதிபதி கண்ணீர்

சுவாசிப்பதற்கும், உணவு அளிப்பதற்குமான குழாய் அவருக்கு பொருத்தப்பட்டுள்ளது. சுயநினைவு இல்லாமல் உள்ளார். டாக்டர்கள் கைவிட்ட நிலையில், ஹரீஷ் ராணாவுக்கான உயிர் காக்கும் கருவிகளை அகற்ற அனுமதி கோரி அவரது பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை, நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது. அப்போது நீதிபதி பர்திவாலா உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்டார்.

”இது வெறும் சட்டம் சார்ந்த முடிவு அல்ல; அன்பு, மருத்துவம் மற்றும் அறிவியல் சார்ந்த முடிவு. உங்கள் மகனை கைவிடவில்லை. மாறாக அவர் கண்ணியத்துடன் இறக்க நீங்கள் அனுமதி கேட்டுள்ளீர்கள்,” என்று ராணாவின் பெற்றோரை நோக்கி குறிப்பிட்டார்.

இது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

உயிர் காக்கும் கருவிகளை அகற்றுவது என்பது, நோயாளியின் சிறந்த நலனுக்காக இருக்க வேண்டும். இது ஹரீஷ் ராணாவுக்கு பொருந்துகிறது. எனவே, அவரது பெற்றோர் கோரிக்கையை இந்த நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது.

ஹரீஷ் ராணாவை டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்து, உரிய மருத்துவ கண்காணிப்புடன் சிகிச்சைகளை நிறுத்த வேண்டும்; உயிர் காக்கும் கருவிகளை அகற்ற வேண்டும்.

சட்டம் தேவை

மருத்துவ சிகிச்சையை நிறுத்திக் கொள்வதால், நோயாளியை கைவிடுவதாக அர்த்தம் இல்லை. ஒரு நோயாளி குணமடைய வாய்ப்பே இல்லாதபோது, சிகிச்சையின் மூலம் அவரது உடலியல் வாழ்க்கையை மட்டும் நீட்டிப்பது அவருக்கு செய்யும் அநீதி.

கருணை கொலை தொடர்பாக முறையான சட்டத்தை இயற்றுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருணை கொலை தொடர்பாக, 2018ல் வழங்கப்பட்ட தீர்ப்பில், ‘வென்டிலேட்டர்’ போன்ற உயிர் காக்கும் கருவிகளை அகற்ற அனுமதி இருந்தது. ஆனால், குழாய் மூலம் உணவு மற்றும் நீர் வழங்குவது சிகிச்சையா அல்லது அடிப்படை உரிமையா என்பதில் தெளிவு இல்லாமல் இருந்தது.

தற்போது குழாய் வழி உணவும், மருத்துவ சிகிச்சையின் ஒரு பகுதியே என்றும் டாக்டர்கள் பரிந்துரைத்ததால், ‘அதை நிறுத்திக் கொள்ளலாம்’ என, உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

Source link