1400 தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வெற்றி: திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்த உழைப்போர் உரிமை இயக்கம் | பாரதி பேட்டி

1,400 தூய்மைப் பணியாளர்களை தனியார் நிறுவனத்துக்கு மாற்றியதைக் கண்டித்து, சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உழைப்போர் உரிமை இயக்கம் முன்னெடுத்த தொடர் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து மெரினா கடலில் இறங்கும் போராட்டம், கூவம் ஆற்றில் இறங்கும் போராட்டம், தொடர் உண்ணாவிரதப் போராட்டம் என்று, இடைவிடாது களம் கண்டார்கள் தூய்மைப் பணியாளர்கள்.

ஒரு கட்டத்தில் தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்த இந்து சமய மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் சேகர் பாபு, “1400 தூய்மைப் பணியாளர்களும் முன்பு போல மாநகராட்சி ஊழியர்களாக மாற்றப்படுவார்கள்” என்று உறுதியளித்தார். இதையடுத்துப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்தச்சூழலில் உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநில தலைவர் வழக்கறிஞர் பாரதி உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து, சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள்.

இதுகுறித்து வழக்கறிஞர் பாரதியிடம் பேசினோம்.

உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி

உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி

“அரசு வாக்குறுதி அளித்தபடி போராடிய தூய்மைப் பணியாளர்களை மாநகராட்சி ஊழியர்களாக பணி அமர்த்திவிட்டதா?”

“மாநகராட்சியில் சுய உதவிக்குழு தொழிலாளர்களாக, ஐந்து மற்றும் ஆறாம் மண்டலங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த 1400 தூய்மைப் பணியாளர்களை தனியார் நிறுவனத்துக்கு மாற்றியதைக் கண்டித்தும், பணி நிரந்தரம் செய்யக்கோரியுமே நாங்கள் போராடினோம். “முன்பிருந்ததைப் போல, திரும்பவும் கார்ப்பரேஷனுக்கே எடுத்துக்கொள்கிறோம்’ என்று அரசு உத்தரவாதம் தந்தது.

இப்போது 1400 தொழிலாளர்களையும் பழைய நிலையிலேயே கார்ப்பரேஷனில் பணி அமர்த்தி விட்டார்கள். இப்போது 8-ம் மண்டலத்திலும் 4-ம் மண்டலத்திலுமே காலியிடங்கள் இருந்ததால் அங்கே பணியமர்த்தப்பட்டுள்ளார்கள். பணியில் சேர்ந்து தொழிலாளர்கள் சம்பளமும் வாங்கிவிட்டார்கள். ஆனாலும் எங்களது பிரதான கோரிக்கை என்பது, பணி நிரந்தரம் செய்வது. அதை இன்னும் நிறைவேற்றவில்லை. அதை வலியுறுத்தி மே 20ம் தேதி பிரமாண்ட மாநாடு நடத்தப்போகிறோம்.”

Source link