சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், 15 புதிய தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அமைச்சரவைக் கூட்டம், தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
மேலும், 15 தொழில் முதலீடுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, தொழில் துறை அமைச்சர் ராஜா கூறியதாவது:
அமைச்சரவைக் கூட்டத்தில் 15 தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதன்வாயிலாக, 34,237 கோடி ரூபாய்க்கான முதலீடும், 55,096 பேருக்கு வேலைவாய்ப்பும் உருவாகும்.
மாநிலத்தின் பரவலான வளர்ச்சிக்கு உதவும் வகையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலுார், திருச்சி, கரூர், திருப்பூர், ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்களில், இந்த புதிய முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதில், ஒரு முக்கியமான திட்டம் குறித்து 13ம் தேதி அறிவிக்கப்படும். வரும் 12ம் தேதி நடக்கவுள்ள, ‘கன்வெர்ஷன் கான்கிளேவ்’ நிகழ்ச்சியிலும் பல அறிவிப்புகள் வெளிவர உள்ளன.
கேமரா உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும், ‘கெயின்ஸ் சர்க்யூட்’ வாகன மின்னணு உதிரி பாகங்கள் தயாரிக்கும், ‘ஜான்சன் எலக்ட்ரிக்’ ‘எவர்வேன் கோத்தாரி புட்வேர்’, ‘அடிடாஸ்’, கப்பல் கட்டும் நிறுவமான, ‘சென்னை ராதா இன்ஜினியரிங்’ ஆகியவற்றுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
வாகன உதிரி பாகங்கள், பேருந்து பாகங்கள் தயாரிக்கும், ‘யசாக்கி இந்தியா’ நிறுவனம், ஏற்கனவே இயங்கிவரும், ‘ஹூண்டாய்’ நிறுவனத்தின் விரிவாக்க திட்டத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. சோலார் செல் உற்பத்தி செய்யும், ‘ஜென்சால்’ நிறுவனமும் துாத்துக்குடிக்கு வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
