169 தொகுதிகளில் களமிறங்குகிறது அ.தி.மு.க.,: கூட்டணிகளுக்கான இடங்களையும் அறிவித்தது

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில், 169 தொகுதிகளில் அ.தி.மு.க., போட்டியிடுகிறது. மேலும், பா.ஜ., – பா.ம.க., – அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விபரங்களையும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று அறிவித்தார்.

அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில், பா.ஜ., – பா.ம.க., – அ.ம.மு.க., – த.மா.கா., புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி உள்ளன. இதில், பா.ஜ.,வுக்கு 27, பா.ம.க.,வுக்கு 18, அ.ம.மு.க.,வுக்கு 11 என்ற எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

புதிய நீதிக் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை கூட்டணியில் பேச்சு நடத்தி வந்தன. அவ்விரு கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கப்படவில்லை.

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் போக, மீதமுள்ள 169 தொகுதிகளில், அ.தி.மு.க., போட்டியிடுகிறது. இந்த நிலையில், இக்கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்ற விபரத்தை பழனிசாமி நேற்று வெளியிட்டார்.

பின் அவர் கூறுகையில், ”தே.ஜ., கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடைந்தது. புரட்சி பாரதம் கட்சியின் ஜெகன் மூர்த்தியும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஜான்பாண்டியனும் எந்த சின்னத்தில் போட்டியிடுவர் என்பது அவர்களின் விருப்பம். வீட்டில் இருக்கும் தவெ.க., தலைவர் விஜய்க்கு, தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுகள் கிடைக்காது,” என்றார்.

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி விபரங்களை பழனிசாமி வெளியிடும் நிகழ்ச்சி, சென்னை ராயப்பேட்டை, அ.தி.மு.க., அலுவலகத்தில் நேற்று நடந்த போது, பழனிசாமி அருகில் பா.ம.க., தலைவர் அன்புமணி, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் உள்ளிட்டோர் அமர்ந்தனர்.

பா.ஜ., மேலிட பொறுப்பாளர்கள் அமர இடமில்லை. இதை பார்த்த பழனிசாமி, ”அவர்களுக்கு சேர் போடுங்கப்பா,” என சொல்ல, வரிசையில் ஓரமாக சேர்கள் போடப்பட்டன.

அம்பத்துார் தொகுதி பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்படுவதாக அறிவித்ததும், அத் தொகுதியை எதிர்பார்த்திருந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் அலெக்சாண்டர் அதிர்ச்சி அடைந்தார் .

அதேபோல், ஊட்டி தொகுதியை பா.ஜ.,வுக்கு ஒதுக்கியதால், கடுப்பான, அ.தி. மு.க., நீலகிரி மாவட்ட செயலர், வினோத் கோபமாக வெளியேறினார்.

Source link