17 கப்பல்கள், 2000 இலக்குகள் அழிப்பு; சொல்கிறது அமெரிக்க ராணுவம்

நியூயார்க்: ஈரான் மீதான தாக்குதல்களில் 17 கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டு, 2,000 இலக்குகளை அமெரிக்கப் படைகள் அழித்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு ராணுவ நடவடிக்கையான ‘ஆப்பரேஷன் எபிக் பியூரி’ ஐந்தாம் நாளாக தொடர்ந்தது. இந்நிலையில், அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தளபதியான அட்மிரல் பிராட் கூப்பர் வீடியோ மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

இந்த தாக்குதல் தொடங்கிய முதல் 100 மணி நேரத்திலேயே, ஈரானின் வான்பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணைகள், ஏவு தளங்கள், ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை அழித்துவிட்டோம்.அமெரிக்க கடற்படை தீவிரமாக செயல்பட்டு, ஈரானின் முழு கடற்படையையும் மூழ்கடித்து வருகிறது. இதுவரை, 17 ஈரானிய கப்பல்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதில் ஈரானின் மிக முக்கியமான மற்றும் செயல்பாட்டில் இருந்த நீர்மூழ்கி கப்பலும் அடங்கும்.

தொடர்ந்து 24 மணி நேரமும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறோம். நுாற்றுக்கணக்கான போர் விமானங்கள், 50,000க்கும் மேற்பட்ட வீரர்கள், இரண்டு விமானம் ஏந்திய கப்பல்கள், கனரக குண்டுவீசும் விமானங்கள் உள்ளிட்ட பெரும் படைப்பலம் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Source link