175 தொகுதிகளில் உதயசூரியன்; கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை; முழு விவரம் இதோ

சென்னை: கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்ட நிலையில், தற்போதைய நிலவரப்படி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 175 ஆக இருக்கிறது.

தமிழக சட்டசபை தேர்தல் முக்கிய கட்டத்தை எட்டி இருக்கிறது. அதிமுக தமது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட, திமுகவோ தமது கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள்(8 தொகுதிகள்), தேமுதிக(10 தொகுதிகள்) ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து உடன்பாட்டை எட்டி இருக்கிறது.

மக்கள் நீதி மய்யத்திற்கு எத்தனை தொகுதிகள் என்ற அறிவிப்பு வெளியாகக்கூடும் என்ற நிலையில், இந்த தேர்தலில் தமது மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். தொகுதி எண்ணிக்கை, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட பரிந்துரை ஆகிய காரணங்களால் தேர்தலில் போட்டியில்லை என்று அதற்கு அவர் விளக்கமும் தெரிவித்துவிட்டார்.

இதையடுத்து, திமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளின் தொகுதிகள் பங்கீடு அனைத்தும் நிறைவுக்கு வந்துவிட்டன. அதாவது கூட்டணிக்கட்சிகளுக்கு திமுக இது வரை 66 (தேமுதிகவுக்கு கொடுத்ததையும் சேர்த்து) தொகுதிகளை பிரித்துக் கொடுத்து விட்டது.

தற்போது திமுக வசம் மொத்தம் 168 தொகுதிகள் இருக்கின்றன. கூட்டணியில் இன்னும் சில கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டி இருக்கிறது. அதில் 7 இடங்களில் கூட்டணிக் கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.

168 தொகுதிகளில் திமுக போட்டி + 7 தொகுதிகளில் உதயசூரியன் என்று கணக்கிட்டால் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒட்டுமொத்த எண்ணிக்கை 175 ஆக இருக்கிறது. அதாவது திமுகவில் நேரடியாக 168 வேட்பாளர்கள்+உதயசூரியன் சின்னத்தில் 7 தொகுதிகளில் (மதிமுக3, மமக 2, கொமதேக 2) வேட்பாளர்கள் என மொத்தம் 175 தொகுதிகளில் களம் இறங்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.

கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக அளித்துள்ள தொகுதிகளின் (எண்ணிக்கை;

காங்கிரஸ் – 28

தேமுதிக – 10

விடுதலை சிறுத்தைகள் – 8

இந்திய கம்யூனிஸ்ட் – 5

மார்க்சிஸ்ட் – 5

மதிமுக – 4

கொங்குநாடு மக்கள் தேசியகட்சி – 2

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 2

மனிதநேய மக்கள் கட்சி – 2 மொத்தம் – 66 (9 கட்சிகளுக்கு)

கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், உதயசூரியன் சின்னத்தில் களம் இறங்கிய வேட்பாளர்களின் எண்ணிக்கை 182. இதில் திமுக வேட்பாளர்கள் 173. எஞ்சிய 9 பேரும் இதர கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள். கடந்த தேர்தலை ஒப்பிடும் போது திமுக இம்முறை சற்று குறைவான தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தொகுதிகள் எண்ணிக்கை முடிவாகி விட்ட நிலையில் எந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்ற தெளிவான விவரங்கள் வெளியாகிவிட்டன. அடுத்து, ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், எந்த கட்சி எந்த தொகுதியில் போட்டியிடுவது என்ற முடிவுகள் விரைவில் எடுக்கப்பட இருக்கின்றன. அடுத்து வரக்கூடிய சில நாட்களில் அனைத்தும் இறுதியாகி, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்க இருக்கிறது.

Source link