— நமது சிறப்பு நிருபர் –
டில்லி – டேராடூன் இடையே புதிதாக கட்டப்பட்டுள்ள விரைவுச் சாலையில், 18 கி.மீ., தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் கீழே வன விலங்குகள் சுதந்திரமாக நடமாடுவது வன உயிரின ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டில்லியில் இருந்து உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் வரை, 213 கி.மீ., துாரத்துக்கு விரைவு சாலை அமைக்கப்பட்டுள்ளது. 11,910 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட இந்த விரைவுச்சாலையை பிரதமர் மோடி நாளை மறுநாள் திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
சரணாலயம் புதிய விரைவுச் சாலை மூலம், போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். குறிப்பாக ஆறு மணி நேர பயணம், பாதியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விரைவு சாலையில் உத்தர பிரதேசத்தின் கணேஷ்பூரில் இருந்து உத்தரகண்டின் டேராடூன் வரை, 18 கி.மீ., தொலைவு வனப்பகுதியாகும்.
வனவிலங்குகள் – மனிதர்கள் இடையே மோதலை தவிர்க்கும் நோக்கில், உத்தர பிரதேசத்தின் ஷிவாலிக் வன சரகத்தில் இருந்து உத்தரகண்டின் ராஜாஜி புலிகள் சரணாலயம் வரை உயர்மட்ட மேம்பால சாலை அமைக்கப் பட்டுள்ளது.
முன்னர், இந்த 18 கி.மீ., தொலைவிலான பாதையை வனவிலங்குகள் கடக்க வசதியாக, இரவு நேரங்களில் வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
தற்போது மேம்பால சாலை அமைக்கப்பட்டுள்ளதால், வாகன போக்குவரத்துக்கான இரவு நேர கட்டுப்பாடுகள் நீங்கும் என கூறப்படுகிறது.
இதை உறுதி செய்யும் வகையில், வனப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மேம்பால சாலையின் கீழ் பகுதியை வனவிலங்குகள் சுதந்திரமாக கடக்க துவங்கி உள்ளன.
வனத்துறை சார்பில், 18 கி.மீ., தொலைவிலான வனப்பகுதியில், 150க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
அந்த கேமராக்கள் மேம்பால சாலையை வனவிலங்குகள் எந்த அளவுக்கு பயன் படுத்த துவங்கி இருக்கின்றன என்பதை படம் பிடித்து காட்டி இருக்கின்றன.
பொதுவாக வாகன போக்குவரத்து குறைவாக காணப்படும் இரவு வரை, இப் பகுதியை கடக்க வனவிலங்குகளும் காத்திருந்தன. ஆனால், மேம்பால சாலை அமைக்கப்பட்டதால், தற்போது நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது.
மாலை வேளைகளிலேயே வனவிலங்குகளின் நடமாட்டம் இப்பகுதியில் அதிகரிக்க துவங்கி உள்ளது.
வனத்துறை ொருத்தி உள்ள அந்த கேமராக்களில் காட்டு யானைகள், சிறுத்தைகள், குள்ள நரி, கரடி, புள்ளி மான் உள்ளிட்ட 18 வகையான உயிரினங்கள் இந்த பாதையை கடந்து செல்வது தெளிவாக பதிவாகி இருக்கிறது.
வரப்பிரசாதம் அதேபோல், இந்திய மயில்கள், காட்டு கோழி ஆகியவையும் இந்த சுரங்கப்பாதை வழியாக சென்று வருகின்றன.
இது குறித்து ஷிவாலிக் வனச் சரக அதிகாரி விபுல் சிங்கால் கூறும்போது, ”மேம்பாலத்தின் கீழே வனவிலங்குகள் கடப்பது கேமராக்களில் தெளிவாக பதிவாகி உள்ளன. இது ஒரு டிஜிட்டல் ஆதாரமாக மாறி இருக்கிறது,” என்றார்.
மனிதர்களின் வசதிக்காக உருவாக்கப்பட்ட இந்த விரைவுச் சாலை, தற்போது வன உயிரினங்களின் பயன்பாட்டிற்கும் வரப்பிரசாதமாக மாறி இருப்பது வன உயிரின ஆர்வலர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
