ஹோஷியார்பூர்: தையல் கடையில் காஸ் சிலிண்டர் வெடித்து, இரண்டு தீயணைப்பு வீரர்கள் உட்பட நான்கு பேர் காயம் அடைந்தனர்.
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் பக்வூர் அடாவில் ஒரு தையல் கடையில் நேற்று காலை தீப்பற்றியது. தகவல் அறிந்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர். கடைக்குள் பற்றி எரிந்த தீ பெரிய அளவில் இல்லை என்றாலும், திடீரென கடைக்குள் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. கடை உரிமையாளர் மந்தீப் கவுர்,25, ராஜ்வீர் கவுர், 50, தீயணைப்பு வீரர்கள் மன்ஜித் சிங் மற்றும் பர்ம்ஜித் சிங் ஆகிய நான்கு பேர் காயம் அடைந்தனர். உடனடியாக, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் நான்கு பேரும் சேர்க்கப்பட்டனர்.
ஹோஷியார்பூர் சப்-கலெக்டர் ஆஷிகா ஜெயின், மருத்துவ மனைக்கு வந்து காயம் அடைந்தவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
மன்ஜித் சிங்குக்கு 11 சதவீதம் பர்ம்ஜித் சிங்குக்கு முகத்தில் நான்கு சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போலீசாரும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காயமடைந்த நான்கு பேருக்கும் அரசு உதவிகள் மற்றும் மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என சப்-கலெக்டர் ஆஷிகா ஜெயின் கூறினார்.
