நேற்று இரவு மொத்த உலகத்திற்கும் பரபரப்பான இரவாக அமைந்தது. “இரவு ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும்” என்று டிரம்ப் மிரட்டல் விடுத்தால் ஈரான் மீதான பாரிய தாக்குதல் குறித்த அச்சம் நிலவியது.
ஈரான் பொதுமக்கள் ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது கட்டமைப்புகளை பயன்படுத்த வேண்டாம் என இஸ்ரேலும், அமெரிக்காவும் விடுத்த எச்சரிக்கை தாக்குதல் குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்தது.
ஆனால் சுவாரஸ்யமாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முன்மொழிவை ஏற்றுக்கொண்ட டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்கும் நிபந்தனையுடன் ஈரான் மீதான தாக்குதலுக்கான காலக்கெடுவை 2 வாரங்கள் நீட்டிப்பதாக அறிவித்தார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி அசிம் முனீர் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று, இரண்டு வாரங்களுக்கு ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்தி டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த அமெரிக்காவுடனான 2 வார போர் நிறுத்தத்திற்கும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தவும் ஈரான் 10 நிபந்தனைகளுடன் சம்மதித்துள்ளது.
ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டுக்கு மக்களுக்கு நற்செய்தி, இந்தப் போரில் ஈரான் முழுமையான வெற்றியை நெருங்கிவிட்டது. கையறுநிலைக்கும் நிரந்தரத் தோல்விக்கும் அமெரிக்காவை உள்ளாகிய பிறகு போரின் அனைத்து நோக்கங்களும் எட்டப்பட்டுவிட்டன, அமெரிக்கா ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நிறுத்தத்திற்காக கெஞ்சுகிறது” என்று தெரிவித்துள்ளது.
மேலும் அமெரிக்கா பின்வாங்கியது தங்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் அமெரிக்காவின் தாக்குதல் காலக்கெடுக்களுக்குத் தாங்கள் “எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை” என்றும் அது கூறியது.
அதுமட்டுமின்றி இந்த பேச்சுவார்த்தைக்கு இஸ்லாமாபாத் ஒரு பாலமாகச் செயல்பட்டதை ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் உறுதிப்படுத்தியது. பாகிஸ்தான் மூலம் அமெரிக்கா தனது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்த ஈரான் இந்த ஒப்பந்தத்திற்கு ஈரானின் புதிய உச்ச தலைவர் ஆயதுல்லா மொஜ்தபா கமேனி ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் தங்களின் 10 நிபந்தனைகளை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மூலம் அமெரிக்காவுக்கு ஈரான் தெரியப்படுத்தியுள்ளது.
அந்த நிபந்தனைகளில் ஈரான் ராணுவத்தின் மேற்பார்வையில் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை அனுமதிப்பது, அமெரிக்கா தனது தாக்குதலை நிறுத்துவது, பிராந்தியத்தில் உள்ள அனைத்து தளங்களிலிருந்தும் அமெரிக்கப் படைகள் வெளியேறுவது, போர்ச் சேதங்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்குவது மற்றும் ஈரான் மீதான அனைத்துத் தடைகளையும் நீக்குவது உள்ளிட்டவை அடங்கும்.
மேலும் இந்த நிபந்தனைகள் அனைத்தையும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ஈரான் கோரியுள்ளது. அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை வரும் ஏப்ரல் 10 (வெள்ளிக்கிழமை) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என்பதையும் ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.
