`20 ஆண்டு அமெரிக்க தோல்வியை ஆய்வு செய்தோம்' – ஈரான் செய்த ராணுவ மாற்றம்; போரில் என்ன நடக்கிறது?

ஈரானுக்கு எதிரான போரை அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடங்கி 2 வாரங்கள் ஆகிவிட்டது. போர் தொடங்கியவுடன் ஈரானின் தலைவர் அல் கமெனி உட்பட முக்கிய தலைவர்களை கொலை செய்ததால் அடுத்த சில நாட்களில் போரை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிடலாம் என்று அமெரிக்கா தப்புக்கணக்கு போட்டது. ஆனால் அமெரிக்கா நினைத்தது போன்று அவ்வளவு எளிதில் போர் முடியவில்லை. ஈரான் உச்ச தலைவர் அல் கமெனி இப்போரில் கொலை செய்யப்பட்ட பிறகு மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்கா ஆதரவு நாடுகளான துபாய், அபுதாபி, சவுதி அரேபியா, கத்தார் போன்ற நாடுகளில் ஈரான் ஏவுகனைகளை கொண்டும் ட்ரோன்களை கொண்டும் கடுமையாக தாக்கியது. அதோடு இஸ்ரேல் மீதும் மலிவு விலையில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை கொண்டு ஈரான் இத்தாக்குதல் நடத்தியது. இரண்டு வார போரில் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் சேதம் அடைந்துள்ளது.மொஜ்தபா அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் கட்டிடங்கள், ராணுவ நிலையங்கள், ஆயில் நிலைகள் சேதம் அடைந்தாலும், அமெரிக்கா நினைத்த எதுவும் நடக்கவில்லை என்பது மட்டும் உண்மை. ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் என்று நினைத்த அமெரிக்காவின் எண்ணம் ஈடேரவில்லை.`20 ஆண்டு அமெரிக்க தோல்வியை ஆய்வு செய்தோம்’இனியும் அது நடக்குமா என்பது சந்தேகம்தான் என்று அமெரிக்காவே தெரிவித்துவிட்டது. அதோடு ஈரான் சிறிதும் சளைக்காமல் உடனடியாக தங்களது உச்ச தலைவரையும் அறிவித்துவிட்டு எந்த வித தொய்வும் இல்லாமல் தொடர்ந்து போர் செய்து கொண்டிருக்கிறது. இப்போர் குறித்து கருத்து தெரிவித்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி,”கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்க ராணுவம் சந்தித்த தோல்விகளை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். எனவே அதற்கு தக்கபடி ஈரானின் சிறிய ராணுவப் பிரிவுகள் தனித்து நின்று போரிடும் வகையில் எங்களது தற்காப்பு முறையை மாற்றியமைத்துள்ளோம். எனவே, எப்போது, எப்படி இந்தப் போர் முடிய வேண்டும் என்பதை நாங்களே தீர்மானிப்போம்” என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து ஈரான் போரிட்டு வருவது குறித்து சர்வதேச நெருக்கடி குழுமத்தின் ஈரான் திட்ட இயக்குனர் அலி வேஸ் கூறுகையில், ”உயர் தலைமையை இழக்க நேரிட்டாலும், அதனால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஒரு பரவலாக்கப்பட்ட இராணுவக் கட்டளை அமைப்பை உருவாக்கி இருக்கின்றனர். எனவேதான் சில மூத்த தலைவர்களை இழந்த போதிலும், ஆட்சி அப்படியே உள்ளது. 2005ம் ஆண்டு ஆப்கான் மற்றும் ஈராக்கில் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து இது போன்ற புதிய ராணுவ கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஈரான் இப்போது 3 குறிக்கோள்களை மையமாக வைத்து இப்போரில் ஈடுபட்டுள்ளது. முதலாவதாக, எதிரியின் ஆரம்பக்கட்டத் தாக்குதல்களில் இருந்து நாட்டின் தலைமை மற்றும் முக்கிய ராணுவக் கட்டமைப்புகளைப் பாதுகாத்து, தங்களது இருப்பு அழியாமல் இருப்பதை உறுதி செய்வவது ஆகும். இரண்டாவதாக, போரில் தொடர்ந்து நீடிப்பதற்கும் எதிரிக்குத் தொடர்ச்சியான பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கும் தேவையான ஏவுகணைகள் மற்றும் இதர ஆயுதத் திறனைத் தக்கவைத்துக் கொள்வது ஆகும். மூன்றாவதாக, போரை நீண்ட காலத்திற்கு இழுத்தடிப்பது. இதன் மூலம் எதிரி நாடு பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சோர்வடையும் போது, ஈரானுக்குச் சாதகமான நிபந்தனைகளுடன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது ஆகும். அமெரிக்கா போன்ற ஒரு பெரிய வல்லரசுடன் நேருக்கு நேர் மோதி வெற்றி பெற முடியாது என்பதால், போரைத் தற்காப்பு ரீதியாகவும் நீண்ட கால அடிப்படையிலும் கொண்டு செல்வதே ஈரானின் திட்டம்”என்று தெரிவித்தார். இப்போரால் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கு உள்நாட்டிலும், நட்பு நாடுகளிடமிருந்தும் கடும் நெருக்கடி வந்து கொண்டிருக்கிறது. ஈரான் தனது ஏவுகணைகள் மற்றும் மலிவான ட்ரோன் (Drone) படைகளைக் கொண்டு, துபாயில் உள்ள ஒரு சொகுசு படகுத் துறைமுகம் (Marina) மற்றும் கடலில் சென்றுகொண்டிருந்த எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் மூலம், இந்தப் போரை வளைகுடா நாடுகள், துருக்கி, சைப்ரஸ் மற்றும் பிற பகுதிகளில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கும் ஈரான் விரிவுபடுத்தியுள்ளது. அதே சமயம், லெபனானில் ஈரானின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், ஈரானியப் படைகள் ஹார்முஸ் நீரிணையை கிட்டத்தட்ட மூடிவிட்டன. உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் இந்த முக்கிய வழித்தடம் முடங்கியுள்ளதால் உலக அளவில் பெரும் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவின் இந்த போர் வியூகம் குறித்து உலக அளவில் பெரும் கேள்விகள் எழுந்துள்ளன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், இந்தப் போரின் உண்மையான நோக்கம் என்ன என்பதில் அமெரிக்க அரசு தெளிவான பதில்களைத் தவிர்க்கிறது. இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிறுவனத்தைச் சேர்ந்த டேனி சிட்ரினோவிச் இது குறித்து கூறுகையில், ஈரானின் நீண்ட காலத் திட்டங்கள் மற்றும் அதன் உறுதித்தன்மை குறித்த புரிதல் எங்களிடம் இல்லை” என்று அவர் எச்சரிக்கிறார்.இந்தப் போரிலிருந்து சுலபமாக வெளியேற வழி இல்லாததால், அதிபர் ட்ரம்ப் தனது வெற்றி குறித்த இலக்கை  மாற்றியமைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் ஆய்வு பேராசிரியர் ஜொனாதன் பாக்குயின் தெரிவித்துள்ளார். இது தொடரபாக அவர் கூறுகையில், ஈரான் சரணடைய வேண்டும் அல்லது அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பைக் கைவிட்டுவிட்டு, ஈரானிய மக்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் அரசை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறி அவர் விலகிக்கொள்ளப் பார்க்கலாம்”என்று தெரிவித்தார்.

Source link