20 Per Cent Ethanol In Petrol,பெட்ரோலில் எத்தனால் கலப்பு: வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் -மத்திய அரசு விளக்கம் – no more than 20 percent ethanol will be added to petrol govt reply to speculation

சமீப காலமாக, சமூக வலைதளங்களில் பெட்ரோலில் எத்தனால் அளவை 22%, 25% அல்லது 30% ஆக உயர்த்த வாய்ப்புள்ளதாகவும், விரைவில் இவை பெட்ரோல் பங்குகளில் கிடைக்கும் என்றும் வதந்திகள் பரவி வந்தன. இந்த அனைத்து ஊகங்களுக்கும் மத்திய அரசு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மாநிலங்களவையில் இதுகுறித்த கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி, தற்போதைய 20 சதவீத வரம்பிற்கு மேல் எத்தனால் கலப்பதை உயர்த்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

“ஒருவேளை எதிர்காலத்தில் எத்தனால் கலப்பை 20 சதவீதத்துக்கு மேல் உயர்த்துவது பற்றி யோசித்தாலும் அது உடனடியாக நடக்காது. விரிவான அறிவியல் பரிசோதனைகள், தொழில்நுட்ப ஆய்வுகள், வாகன உற்பத்தியாளர்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் நடத்தப்படும் ஆலோசனைகளுக்கு பிறகே சாத்தியமாகும்” என்று அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தியாவில் பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டம் திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல. இது படிப்படியாகவும், முறையான ஆதாரங்களின் அடிப்படையிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2013-14ஆம் ஆண்டில் சராசரி எத்தனால் கலப்பு வெறும் 1.53 சதவீதமாக இருந்தது. அடுத்து 2021-22ஆம் ஆண்டில் இது 10 சதவீதமாக உயர்ந்தது. அடுத்து, 2023-24ஆம் ஆண்டில் கலப்பு அளவு 14.6 சதவீதமாகவும், 2024-25ஆம் ஆண்டில் எத்தனால் கலப்பு 19.2 சதவீதம் என்ற நிலையை எட்டியது. 2025-26 (நவம்பர் – ஜூன்) காலத்தில் இந்தியா வெற்றிகரமாக 20 சதவீத (E20) இலக்கை அடைந்துள்ளது.

தற்போது, இந்தியா முழுவதும் E20 எரிபொருள் குறித்த விவாதங்களும் சலசலப்புகளும் அதிகமாக இருக்கும் நிலையில், எத்தனால் கலக்கப்படாத பெட்ரோலும் விற்பனைக்குக் கிடைக்குமா என்ற கேள்வியும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. தூய பெட்ரோல் (E0 அல்லது E10) விநியோகம் செய்யப்படுமா என்று மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வி. சிவதாசன் பெட்ரோலிய அமைச்சகத்திடம் கேட்டார். அதற்குப் பதிலளித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி, அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

E20 பெட்ரோல் பயன்பாட்டால் வாகனங்களின் செயல்பாட்டில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இதுவரை உறுதியான புகார்கள் எதுவும் வரவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. E20 எரிபொருளைப் பயன்படுத்துவதால் என்ஜின் சேதம், தேவையற்ற தேய்மானம் அல்லது செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்படுவதற்கான எந்தவொரு அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை என்றும் பெட்ரோலிய அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

அதேபோல, ஊடகச் செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்ட கவலைகள் குறித்து அரசு அறிவியல் பூர்வமான மதிப்பீட்டை மேற்கொண்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. நீண்ட கால ஆய்வகச் சோதனைகள், கள சரிபார்ப்புகள் மற்றும் பயனாளர்களின் நேரடி அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், வாகனங்களின் செயல்பாட்டில் E20 எரிபொருள் பாதகமான விளைவை ஏற்படுத்துவதாக நிரூபிக்கப்படவில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களில் E0, E10 மற்றும் E20 பெட்ரோல் வகைகளுக்குத் தனித்தனி மற்றும் இணையான விநியோகச் சங்கிலிகள், இருப்பு மற்றும் கையாளுதல் ஏற்பாடுகளைப் பராமரிப்பது நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்று அரசு கூறியுள்ளது. இது தளவாடச் செயல்பாடுகளின் சிக்கலையும் செலவுகளையும் கணிசமாக அதிகரிக்கும் என்றும் அரசு கூறுகிறது.

Source link