திருவண்ணாமலை:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் நிலையில், மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், 2024-ம் ஆண்டு மண்சரிவு ஏற்பட்ட வ.உ.சி. நகர் உள்ளிட்ட மலை அடிவாரத்தின் பல்வேறு இடங்களில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பின்புறம் உள்ள தீபமலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு பெஞ்சால் புயல் காரணமாக கன மழை பெய்தது, இதனால் திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட வ உ சி மலை அடிவாரப் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.இந்த சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கியது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கன மழைக்கு வாய்ப்பு
இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கன மழைக்கு வாய்ப்புஇருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
குறிப்பாக ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, தேனி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மழை பெய்யும் சமயங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் ஆய்வு
இதன் காரணமாக இன்று மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி மற்றும் அருகே உள்ள மலையடிவாரப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது அதிக கனமழை பெய்தால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கினார்.அதோடு மட்டுமில்லாமல் மலை சரிவு பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் இன்று அல்லது நாளை மாற்று இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் முதற்கட்டமாக ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவு
மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் சிலை அருகில் உள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் மாநகராட்சியின் பல தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் சூழல் குறித்து அவர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில், மழைநீர் தேங்கினால் அதனை உடனடியாக உறிஞ்சி அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், மழைக்காலத்தில் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க தூய்மைப் பணிகளைத் துரிதப்படுத்தவும், வடிகால் வாய்க்கால்களில் அடைப்புகள் இருந்தால் அவற்றை உடனுக்குடன் சீரமைக்கவும் அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். மழைக்கால அவசர உதவிகளுக்குத் தயார் நிலையில் இருக்குமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அவர் கட்டளையிட்டுள்ளார்
