2024 – 25ல் ரூ.6,769 கோடி வருவாய் ஈட்டியது பா.ஜ.,

புதுடில்லி: கடந்த 2024 — 25ம் நிதியாண்டில், ஆளும் பா.ஜ., 6,769.14 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளதாக, தன்னார்வ அமைப்பான ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது. இது, தேசிய கட்சிகள் பெற்ற மொத்த தொகையில், 85.03 சதவீதம் என தெரியவந்துள்ளது.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அமைச்சர்களின் குற்றப் பின்னணி விபரங்களையும், அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் நன்கொடைகள் மற்றும் அறக்கட்டளைகள் வாயிலாக வசூலாகும் நிதியை கண்காணித்து, அறிக்கையாகவும் வெளியிட்டு வருகிறது. இதன்படி, 2024 – 25ம் நிதியாண்டில், நன்கொடை மூலம் வருமானம் ஈட்டிய அரசியல் கட்சியினரின் விபரங்களை வெளியிட்டுள்ளது.

அதன் விபரம்: தேசிய கட்சிகளான பா.ஜ., – காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ., – ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், தேசிய மக்கள் கட்சி ஆகிய ஆறு கட்சிகளும் இணைந்து, 2024 – 25ம் நிதியாண்டில், 7,960.09 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது.

இதில், அதிகபட்சமாக மத்தியில் ஆளும் பா.ஜ., 6,769.14 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. இது, தேசிய கட்சிகள் பெற்ற மொத்த தொகையில் 85.03 சதவீதம். அடுத்ததாக, காங்கிரஸ் கட்சிக்கு, 918.28 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூ., 172.60 கோடி ரூபாயும், பகுஜன் சமாஜ் 58.58 கோடி ரூபாயும், ஆம் ஆத்மி 39.28 கோடி ரூபாயும் வருமானம் ஈட்டி உள்ளது. பா.ஜ., அதன் வருவாயில் 3,774.58 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. காங்., 1,111.94 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. இது, அதன் மொத்த வருவாயை விட 21.09 சதவீதம் அதிகம்.

கடந்த 2023 – 24 மற்றும் 2024 – 25ம் நிதியாண்டுகளுக்கு இடையே, பா.ஜ.,வின் வருமானம் 55.95 சதவீதமும், காங்.,கின் வருவாய், 25.05 சதவீதமும் அதிகரித்துள்ளது.

இதேபோல் தேர்தல் பிரசாரத்திற்காக பா.ஜ., 3,335.36 கோடி ரூபாயும், நிர்வாகச் செலவுகளுக்காக 323.05 கோடி ரூபாயும் செலவிட்டுள்ளது.

காங்., தேர்தல் செலவினங்களுக்காக 896.22 கோடி ரூபாயும், நிர்வாக மற்றும் பொதுச் செலவுகளுக்காக 159.68 கோடி ரூபாயும் செலவிட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link