2026ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இந்திய அணி இனி என்னென்ன தொடர்களில் விளையாட உள்ளது என்பது குறித்து அட்டவணை வெளியாகி உள்ளது.
ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை, மொத்தம் 6 தொடர்களில் இந்திய அணி பங்கேற்று விளையாட உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இந்திய அணி, இலங்கை சென்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இத்தொடரின் முதல் போட்டி, ஆகஸ்ட் 15ஆம் தேதி துவங்கும். இதனைத் தொடர்ந்து, இரண்டாவது போட்டி, ஆகஸ்ட் 23ஆம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாட உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி, தனது ஹோம் கிரௌண்டாக இந்தியாவைதான் பயன்படுத்த உள்ளது. அதாவது, இந்திய அணி, தனது சொந்த மண்ணிலேயே, அவே சீரியஸில் பங்கேற்க உள்ளது. மொத்தம், 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடர், செப்டம்பரில் நடைபெறும்.
ஏசியன் கேம்ஸ்: அடுத்து, ஜப்பானில் நடைபெறும் ஏசியன் கேம்ஸ் தொடரில், இந்திய அணி பங்கேற்க உள்ளது. இத்தொடர், செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து, இந்தியா வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், அடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. முதலில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை நடைபெறும். இதனைத் தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், அக்டோபர் 6 முதல் 17ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறகு, நியூசிலாந்து செல்லும் இந்திய அணி, முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளனர். பிறகு, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறும்.
இதில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், அக்டோபர் 22ஆம் தேதி முதல் நவம்பர் 1ஆம் தேதி வரை நடைபெறும். பிறகு, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், நவம்பர் 4 முதல் 15ஆம் தேதி வரை நடைபெறும். பிறகு, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், நவம்பர் 19 முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை நடைபெறும்.
பிறகு, இந்தியா வரும் இலங்கை அணி, முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், அடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் பங்கேற்க உள்ளது. முதலில் நடைபெறும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், டிசம்பர் 13 முதல் 19ஆம் தேதி வரை நடைபெறும். அடுத்து, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், டிசம்பர் 22 முதல் 27ஆம் தேதி வரை நடைபெறும்.
இதில், இலங்கைக்கு எதிராக டெஸ்ட் தொடர் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடர் மிகமுக்கியமானதாக இருக்கிறது. இந்த இரண்டு தொடர்களிலும் இந்திய அணி வெற்றியைப் பெற்றால்தான், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணியால் முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
