புதுடில்லி: ”இண்டி கூட்டணி தலைமை பொறுப்புக்கு, தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலினே மிகவும் பொருத்தமானவர்; 21ம் நுாற்றாண்டின் காமராஜராக அவர் உருவெடுத்து வருகிறார்,” என, காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், 85, கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான மணிசங்கர் அய்யர், பி.டி.ஐ., செய்தி நிறுவனத்துக்கு நேற்று அளித்த பேட்டி: தற்போதைய சூழலில், வரும் 2029- லோக்சபா தேர்தலை இலக்காக வைத்து பார்க்கும்போது, ‘இண்டி’ கூட்டணியின் தலைமை பொறுப்புக்கு, தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினே மிகவும் பொருத்தமானவர். அவரை விட சிறந்த தலைவர் தற்போது யாரும் இல்லை. அவரது தலைமையை ஏற்பது காங்கிரசுக்கு நல்லது.
ஒரு பெரிய கட்சியை விட, கூட்டணியில் உள்ள ஒரு சிறிய கட்சி, கூட்டணிக்கு தலைமை பொறுப்பை ஏற்பதே, கூட்டணியின் ஒற்றுமைக்கு சிறந்த உத்தரவாதமாக இருக்கும். வலுவான இண்டி கூட்டணியால் மட்டுமே, 2029 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற முடியும். அந்த வெற்றி கிடைத்தால் மட்டுமே ராகுல் பிரதமராக முடியும்.
தேசிய அளவில் இண்டி கூட்டணியை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வழி நடத்தும் வேளையில், தேர்தலுக்கு பின் அவரது மகன் உதயநிதி, மாநில அரசை திறம்பட நடத்த முடியும். 21ம் நுாற்றாண்டின் காமராஜராக ஸ்டாலின் உருவெடுத்து வருகிறார். அவரால், இண்டி கூட்டணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல முடியும்.
அவரது மாசற்ற, மதச்சார்பற்ற கொள்கை மற்றும் ஒருமித்த கருத்தை உருவாக்கும் நிர்வாகத் திறன் ஆகியவையே, அவரை இந்த பதவிக்கு சரியான தேர்வாக ஆக்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இண்டி கூட்டணியின் தலைமை பொறுப்புக்கு ஸ்டாலின் பெயரை, மணிசங்கர் அய்யர் மீண்டும் மீண்டும் பரிந்துரைப்பதோடு, காமராஜருடன் ஸ்டாலினை ஒப்பிட்டு பேசியது, காங்கிரஸ் வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
