சென்னை: ”பொது விடுமுறை நாட்கள் வருவதால், 234 சட்டசபை தொகுதிகளுக்கு, ஐந்து நாட்கள் மட்டுமே மனு தாக்கல் நடக்கும்,” என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறினார்.
சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று அளித்த பேட்டி:
தமிழகத்தில் மார்ச் 15 நிலவரப்படி, 5.69 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், பெண் வாக்காளர்கள் 2.90 கோடியும், ஆண் வாக்காளர்கள் 2.78 கோடியும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7,656 பேரும் உள்ளனர்.
அறிவுறுத்தல்
தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க, 2,106 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
வாக்காளர்களுக்கு ஓட்டுச்சாவடிகளில் சிறப்பான அனுபவத்தை வழங்குவதற்காக, பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன; மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.
வேட்பு மனு தாக்கல், வரும் 30 முதல், ஏப்ரல் 6 வரை நடக்க உள்ளது. இதில், பொது விடுமுறை போக, ஐந்து நாட்கள் மட்டுமே மனுக்கள் பெறப்படும். காலை 11:00 மணி முதல், மதியம் 3:00 மணி வரை மனுக்கள் அளிக்கலாம்.
உரிய ஆவணங்கள் இருந்தால், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம்.
வாகன சோதனையின்போது, பொது மக்களை தொந்தரவு செய்யக்கூடாது என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தேர்தல் பணியில் 3.50 லட்சம் பேர் ஈடுபடவுள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே முதற்கட்ட பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது; இரண்டாம் கட்ட பயிற்சி நடந்து வருகிறது.
வாகன சோதனையின்போது நேற்று காலை வரை, 1.26 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. காலை 6:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படும். பிரசாரங்களுக்கு, ‘ஆன்லைன்’ வாயிலாகவே விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.
தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட, 50 பிரிவு துணை ராணுவப் படையினர் வந்துள்ளனர். தேர்தல் பார்வையாளர்கள் விரைவில் வரவுள்ளனர்.
பணப் பரிவர்த்தனைகள் பிரசாரத்தில், 5,000க்கும் மேற்பட்டோர் கூடும் இடங்களில், குடிநீர் வசதி உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கையாள, அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்படும். ஆன்லைன் வழியாக நடக்கும் மொத்த பணப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் ஸ்ரீதர், சிவஞானம் உடன் இருந்தனர்.
