29 ஆண்டுகளில் இல்லாத மோசமான சரிவு ரிலையன்ஸுக்கு ஒரு சோதனைக்காலம் நடப்பு ஆண்டில் 2.40 லட்சம் கோடி ரூபாய் இழப்பு

இந்திய பங்கு சந்தையின் போக்கை தீர்மானிக்கும் நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு, இந்தாண்டு ஒரு சோதனை ஆண்டாகவே துவங்கியிருக்கிறது. கடந்த 1997ம் ஆண்டுக்கு பின், ஒரு நிதி ஆண்டின் துவக்கத்தில் இந்நிறுவனம் சந்திக்கும் மிக மோசமான வீழ்ச்சி இதுவாகும்.

நேற்றைய வர்த்தகத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 4 சதவீதம் வரை சரிந்து, 10 மாதங்களில் இல்லாத அளவாக, ஒரு பங்கின் விலை 1,301 ரூபாயை தொட்டு, முதலீட்டாளர்களை கலக்கம் அடையச் செய்தது. நிறைவில், 1,304 ரூபாய்க்கு முடிந்தது.

இதன் காரணமாக, அதிக சந்தை மதிப்பு கொண்ட இந்த நிறுவனத்தின் மொத்த சந்தைமதிப்பு 18 லட்சம் கோடி ரூபாய்க்கும் கீழே சரிந்தது. நடப்பு ஆண்டில் மட்டும் இந்நிறுவனம் தன் சந்தை மதிப்பில் 2.4 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விலை நிலவரம்: (06.04.2026) ரிலையன்ஸ் பங்கு விலை ரூ.1,304.70 52 வார உச்ச விலை ரூ.1,611.80 (ஜன.5, 2026) உச்சத்தில் இருந்து சரிவு 19% ஒரு மாதத்தில் சரிவு 8% நடப்பு ஆண்டில் இழந்த சந்தைமதிப்பு ரூ.2.40 லட்சம் கோடி தற்போதைய சந்தைமதிப்பு ரூ.17.58 லட்சம் கோடி

சரிவுக்கு என்ன காரணம்?

 பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஆகியவற்றின் மீது, மத்திய அரசு கூடுதல் ஏற்றுமதி வரி விதித்து உள்ளதால், நிறுவனத்தின் லாப வரம்பு பெருமளவு பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.

 போர் பதற்றத்தால் கப்பல் போக்குவரத்து செலவு மற்றும் காப்பீட்டு தொகை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இது இந்நிறுவனத்தின் ‘ஆயில் டூ கெமிக்கல்’ பிரிவுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

 ரிலையன்ஸ் ஜியோவின் சந்தாதாரர் சேர்க்கை மந்தமாக இருப்பதும், எரிபொருள் விற்பனை பிரிவில் போதிய லாபம் இல்லாததும் சரிவுக்கு கூடுதல் காரணங்களாகும்.

எதிர்கால கணிப்பு

தற்போதைய சரிவு முதலீட்டாளர்களுக்கு கவலையை அளித்தாலும், சந்தை நிபுணர்கள் நீண்ட கால அடிப்படையில் நம்பிக்கையுடன் உள்ளனர். பல முன்னணி தரகு நிறுவனங்கள் ரிலையன்ஸ் பங்கின் இலக்கு விலையை சராசரியாக ரூ.1,718 ஆக நிர்ணயித்துள்ளன.

Source link