– நமது சிறப்பு நிருபர் –
பணம் வைத்து விளையாடும், ‘ஆன்லைன்’ விளையாட்டுகள் தடை செய்யப்பட்டதுடன், சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 300க்கும் மேற்பட்ட சூதாட்ட இணையதளங்கள் மற்றும், ‘மொபைல் போன்’ செயலிகளை மத்திய அரசு முடக்கியுள்ளது.
பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு, பொது மக்கள் அடிமையாகி லட்ச கணக்கான பணத்தை இழந்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் அதிகரித்தன.இதையடுத்து மத்திய அரசு, ‘ஆன்லைன் கேமிங்’ சட்டத்தை கடந்த ஆண்டு அமல்படுத்தியது. இச்சட்டம் பணத்தை சுரண்டும் விளையாட்டுகளை தடை செய்துள்ளது.
இந்த சட்டம் அமலுக்கு வந்த பின், 4,900 ஆன்லைன் விளையாட்டு தளங்கள் முடக்கப்பட்டு உள்ளன. மேலும், இது போன்ற ஆன்லைன் விளையாட்டு தளங்களை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் 300 இணையதளம், செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘சட்டவிரோத தளங்களை கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.’அங்கீகாரம் இல்லாத சூதாட்ட தளங்களை பயன்படுத்த வேண்டாம்’ என, எச்சரித்துள்ளனர்.
