மும்பை: மும்பை – புனே சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தால் 33 மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகன ஓட்டிகளுக்கு, ரூ.5.16 கோடி சுங்கக் கட்டணத்தை திருப்பி அளிக்க மகாராஷ்டிர மாநில சாலை மேம்பாட்டுக் கழகம் அறிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 3ம் தேதி மும்பை – புனே விரைவுச்சாலையில் கியாஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டேங்கரில் கொண்டு வரப்பட்ட புரோப்பிலின் எனும் எளிதில் தீப்பற்றக்கூடிய கியாஸ் கசியத் தொடங்கியது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலைகளின் இருபக்கமும் போக்குவரத்தை போலீசார் உடனடியாக நிறுத்தினர்.
இதன் காரணமாக, சுமார் 33 மணிநேரம் போக்குவரத்து முடங்கியது. வாகனங்கள் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வரிசை கட்டி நின்றது. இதனால், வாகன ஓட்டிகள் உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்த விபத்தைத் தொடர்ந்து, சுங்கக் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டது. இருப்பினும், பல வாகன ஓட்டிகளின் பாஸ்டேக் கணக்குகளில் இருந்து பணம் தானாகவே எடுக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில், டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தால் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகன ஓட்டிகள் செலுத்திய ரூ.5.16 கோடி சுங்கக் கட்டணத்தை திருப்பி அளிக்க மகாராஷ்டிர மாநில சாலை மேம்பாட்டுக் கழகம் முடிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகளின் பாஸ்டேக் கணக்கிற்கு சில தினங்களில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
