35 ஆண்டுகால திமுக தொண்டர்; அவிநாசி தொகுதியில் வாய்ப்பு கிடைக்குமா?

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருவதால், தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடக் களமிறங்கியுள்ள பணபலமிக்கவர்கள் மத்தியில், பண பலம் இல்லாவிட்டாலும், தங்களது தீவிர கட்சிப்பணிக்கான வெகுமதியாக, போட்டியிடும் வாய்ப்பு கிடைக்குமென்ற எதிர்பார்ப்போடு தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களும் இருக்கிறார்கள்.

WhatsApp Image 2026-03-26 at 3.38.05 PM

அந்தவகையில், தி.மு.க. சர்பாக அவிநாசி தொகுதியில் போட்டியிடுவதற்காக திருப்பூர் மத்திய மாவட்ட துணைச்செயலாளராக பணியாற்றிவரும் டிஜிட்டல் சேகர் என்பவர் மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கிறார். அ.தி.மு.க. பலம்வாய்ந்த திருப்பூர் பகுதியில், தி.மு.க. ஆதரவு வாக்காளர்களை வளர்த்தெடுப்பதற்காக 35 ஆண்டுகளுக்கு மேலாகத் தீவிரமாகக் கட்சிப் பணியாற்றிவருகிறார். அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த எளிய குடும்பப் பின்னணி கொண்டவரான சேகர், பெரும்பாலும் எம்.ஜி.ஆரின் மீது பற்றுக்கொண்டவர்களாக இருக்கும் அருந்ததிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் இயங்கிவரும் பொதுநல அமைப்புகளை ஒருங்கிணைத்து, அப்பகுதி மக்களிடையே தி.மு.க.வின் கொள்கைகள், அரசின் நலத்திட்டங்கள் எனப் பலவற்றையும் எடுத்துக்கூறி, அப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்றுவதன் மூலம் மக்களை தி.மு.க. ஆதரவாளர்களாக மாற்றிவருகிறார். 

தீவிரமாகக் கட்சிப்பணியாற்றும் எளிய தொண்டர்களுக்கும்கூட தேர்தலில் போட்டியிட வாய்ப்புக்கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு, கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்தே தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துவருகிறார். அதேபோல் இம்முறையும் அவிநாசி தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு அளித்து, நேர்காணலிலும் கலந்துகொண்டிருக்கிறார். 

தி.மு.க.வில் திருப்பூர் வார்டு இளைஞரணி செயலாளர், வட்டக்கழக அவைத்தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர், வட்டக்கழக செயலாளராக 18 ஆண்டுகளாக இருந்துள்ளார். தற்போது திருப்பூர் மத்திய மாவட்ட துணைச்செயலாளராக 13 ஆண்டுகாலமாகப் பணியாற்றிவருகிறார். இவர் தி.மு.க. சார்பாக அவிநாசி தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ள நிலையில், தனக்கு வாய்ப்பு கிடைக்குமென மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார். 

Source link