4வது ஆண்டில் ரஷ்யா – உக்ரைன் போர் 3ம் கட்ட அமைதி பேச்சில் தீர்வு ஏற்படுமா?

ஜெனிவா: ரஷ்யா – உக்ரைன் இடையேயான அமைதி பேச்சு, சுவிட்சர்லாந்தில் நேற்று துவங்கிய நிலையில், நிலப்பரப்பு தொடர்பான விவகாரமே மிக முக்கிய விவாத பொருளாக மாறியுள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் நான்காண்டுகளை எட்டியுள்ளது.

இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமைதி திட்டம் ஒன்றை முன்மொழிந்ததுடன், போரை விரைவாக முடிவுக்கு கொண்டு வர அழுத்தம் கொடுத்தும் வருகிறார்.

இதைத்தொடர்ந்து இரு நாடுகளும் அமைதி பேச்சு நடத்த சம்மதம் தெரிவித்தன. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் ஏற்கனவே இருமுறை ரஷ்யா – அமெரிக்கா – உக்ரைன் பிரதிநிதிகள் பங்கேற்ற முத்தரப்பு பேச்சு நடந்தது.

இதன் தொடர்ச்சியாக, ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் தலைநகர் ஜெனிவாவில் மூன்றாம் கட்ட பேச்சு நேற்று துவங்கியது. இப்பேச்சில் நிலப்பரப்பு தொடர்பான விவகாரங்களே பிரதான விவாதப் பொருளாக மாறியுள்ளது.

உக்ரைனின் 20 சதவீத நிலப்பரப்பை ரஷ்யா தற்போது ஆக்கிரமித்துள்ளது. இதில் கிரீமியா மற்றும் டொன்பாஸ் பகுதிகள் அடங்கும். தற்போது, இன்னும் கைப்பற்றப்படாத கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் மீதமுள்ள பகுதிகளையும் உக்ரைன் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று ரஷ்யா அடம் பிடித்து வருகிறது.

ஆனால், உக்ரைனோ, நிலப்பரப்பு விவகாரத்தில் எவ்வித சமரசமும் செய்யப் போவதில்லை என்றும், 2014ல் கிரீமியாவை இழந்தது போன்ற தவறை மீண்டும் செய்ய மாட்டோம் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பேச்சு ஒரு புறம் நடந்தாலும், இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்து ஏவுகணை வாயிலாக தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், இரு நாடுகளுடனான இந்த அமைதி பேச்சை, அமெரிக்க அதிபர் டிரம்ப் பெரிய பேச்சு என குறிப்பிட்டுள்ளதுடன், வருகிற ஜூன் மாதத்துக்குள் விரைவாக இறுதி முடிவை எடுத்து, அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்துள்ளார்.

Source link