‘4 மணி நேரம் வேலை செய்தால் முழு சம்பளம்’ மாற்றுத்திறனாளிகளுக்கு குட் நியூஸ் -15 நாட்களில் வேலை அட்டை கட்டாயம்: தமிழக அரசு அதிரடி – 4 hours work full salary tamil nadu announces new benefits for persons with disabilities

VB GRAM G திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. உடல் திறனுக்கு ஏற்ப பணிகளை ஒதுக்குதல், 50 சதவீத பணி அளவுக்கு முழு ஊதியம் வழங்குதல், தனி மின்னணு வருகைப் பதிவு, 15 நாட்களுக்குள் வேலை அட்டை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆணையர் மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு சமமான வேலைவாய்ப்பு மற்றும் உரிய ஊதியம் கிடைப்பதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆணையரின் அறிவுறுத்தலின்படி, உடல் உழைப்பு செய்யக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு முட்புதர்களை அகற்றுதல், மரக்கன்றுகள் நடுதல், மண்மூடுதல், நீர்பாய்ச்சுதல், மண்வரப்பு அமைத்தல், கல்வரப்பு அமைத்தல் மற்றும் அகழி அமைத்தல் போன்ற பணிகள் வழங்கப்பட வேண்டும்.

இது Vera Level Govt Order | 7மணிக்கு வேலைல இருக்கனும் | CM போட்ட உத்தரவு!

ஒரு பணித்தளத்தில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அவர்கள் இத்தகைய சிறப்புப் பணிகளை மட்டுமே மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 சதவீத பணி செய்தால் முழு ஊதியம்

மாற்றுத்திறனாளிகள் அதிகமாக உள்ள பணித்தளங்களில் மட்டுமே மண் தொடர்பான பணிகளை வழங்க வேண்டும். அப்போது அவர்கள் 5 அல்லது 10 பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு, சாதாரண தொழிலாளர்களுக்கான பணி அளவில் 50 சதவீதம் மட்டுமே முன்கூட்டியே அளவீடு செய்து வழங்கப்பட வேண்டும்.

மேலும், மண் தொடர்பான பணிகளை தினமும் 4 மணி நேரம் செய்தாலே போதுமானது. முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட 50 சதவீத பணியை நிறைவு செய்தால், அவர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

15 நாட்களுக்குள் வேலை அட்டை

வேலை அட்டை கோரும் அனைத்து தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கும் 15 நாட்களுக்குள் தனித்துவமான வேலை அட்டை வழங்க வேண்டும் என்றும், வேலை வழங்குவதில் எந்தவித தாமதமோ நிபந்தனையோ இருக்கக் கூடாது என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனி வருகைப் பதிவு மற்றும் கண்காணிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கென தனி மின்னணு வருகைப் பதிவேடு (e Muster Roll) பராமரிக்கப்பட வேண்டும். இதனை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (MGNREGS) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஆகியோர் உறுதி செய்ய வேண்டும்.

அதேபோல், பணியின் முன் அளவீடும், இறுதி அளவீடும் முறையாக மேற்கொள்ளப்பட்டு, முழு ஊதியம் வழங்கப்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறைகேள் முகாம் நடத்த உத்தரவு

மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்கும் வகையில், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க்கிழமைவட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் குறைகேள் முகாம் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய வழிகாட்டுதல்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்தி, சமமான ஊதியம் மற்றும் உரிமைகளை உறுதி செய்வதே அரசின் நோக்கமாகக் கருதப்படுகிறது.

Source link