மேற்காசியப் பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, தெற்காசிய நாடுகள் உட்பட பல்வேறு உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக, இந்தியாவிலும் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதே நேரத்தில், மேற்காசியப் போரால் நாம் கொரோனா காலத்தைப் போன்ற நெருக்கடியான சூழலைச் சந்திக்க இருப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார். இது குறித்து, நாளை 927-03-26) மாநில முதலமைச்சர்களுடன் காணொளி வாயிலாக விவாதிக்க உள்ளார்.
இந்நிலையில், எரிபொருள் தட்டுப்பாட்டைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக எரிபொருள் துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவுக்குக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு அவசரக்கால நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதே நேரத்தில், வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டருக்கும் கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள ரன்ஹோலா பகுதியில் எல்பிஜி சிலிண்டர்களை பதுக்கி வைத்து கள்ளச் சந்தையில் விற்றதாக, எரிவாயு முகாமை உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நேற்று (25-03-26) நடத்தப்பட்ட இந்த சோதனையில், 459 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ பாலாஜி காஸ் ஏஜென்சி நிறுவனத்தின் உரிமையாளர் சுசில் குமார் சிங்கால் எனும், இந்த நபர் வணிக சிலிண்டர்களை பதுக்கி வைத்து, சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஏற்கனவே, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், இது போன்ற பெரிய அளவிலான எரிவாயு பதுக்கல்கள் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளன. எனவே, எரிவாயு பதுக்கல் குறித்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அவசர நேரத்தில் அமல்படுத்தப்படும் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தை (எஸ்மா) மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
