5 ஆண்டாக துாங்கிய புலனாய்வுக்குழு; ஒரு புகாரை கூட விசாரிக்காத அவலம்

சென்னை : ‘பதிவுத்துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுப்பதற்காக அமைக்கப்பட்ட, சிறப்பு புலனாய்வுக்குழு, ஐந்தாண்டுகளாக ஒரு புகாரை கூட விசாரிக்கவில்லை’ என, தகவல் வெளியாகி உள்ளது.

சொத்து விற்பனை தொடர்பான பத்திரங்களை பதிய, சார் – பதிவாளர் அலுவலகங்களை மக்கள் நாடுகின்றனர். இதில், சார் – பதிவாளர்கள், அவர்களின் நேரடி மேலதிகாரிகள்தான், முக்கிய முடிவுகளை எடுக்கின்றனர்.

இந்நிலையில், 2021ல் தி.மு.க., ஆட்சி அமைந்த போது, பதிவுத்துறை அமைச்சராக மூர்த்தி பொறுப்பேற்றார். அப்போது, அதற்கு முந்தைய ஆட்சி காலத்தில், பத்திரப்பதிவில் நடந்த முறைகேடுகள் விசாரிக்கப்படும் என, அவர் அறிவித்தார்.

அதன்படி, 2021 டிச.,15ல், இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், சிறப்பு புலனாய்வுக்குழுவுக்கு அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. கடந்த 2023ல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

கடந்த காலங்களில், வழிகாட்டி மதிப்புக்கு மாறாக பதிவான பத்திரங்கள், வகைப்பாடு மறைத்து பதிவான பத்திரங்கள், வேண்டுமென்றே குறைவான மதிப்பு நிர்ணயித்தது, மோசடி பத்திரங்களை கண்டு கொள்ளாமல் இருந்தது ஆகிய புகார்களை விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

இதன் அடிப்படையில், சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை மேற்கொண்டு, குற்றாச்சாட்டுகளை அறிக்கையாக அளிக்கும் என, அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஐந்தாண்டு தி.மு.க., ஆட்சிக்காலம் முடிந்த நிலையில், இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.


இது குறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையில் தெரியவந்த, பல்வேறு மோசடிகள் விபரம், மேலதிகாரிகள் மற்றும் அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான விவகாரங்களில், நடவடிக்கை எடுக்க, மேலதிகாரிகள் விரும்பாததால், இந்த முயற்சி பாதியிலேயே முடங்கி விட்டது.

குறிப்பிட்ட சில வழக்குகளில், குற்றச்சாட்டுக்கு ஆளான நபர்கள், மேலதிகாரிகளாக உள்ளதால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், சிறப்பு புலனாய்வுக்குழுவால், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Source link