5 ஆண்டுகளில் 816 ஆலைகளுக்கு 7,558 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு

சென்னை, : கடந்த ஐந்து ஆண்டுகளில், 30 ‘சிப்காட்’ தொழில் பூங்காக்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், 816 புதிய தொழிற்சாலைகளுக்கு, 7,558 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் ஒரே இடத்தில் பல தொழில்கள் துவக்குவதற்கு வகை செய்யும், ‘சிப்காட்’ நிறுவனம், புதிய தொழிற்சாலைகள் உருவாக தொழிற்பூங்காக்களை உருவாக்கி, லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற வழி செய்து வருகிறது.

2021ல் ஆட்சி பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர், அதாவது, இந்திய ரூபாயில், 90 லட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதார மாநிலமாக உயர்த்த இலக்கு நிர்ணய ி த்தார்.

இதற்காக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, தமிழக தொழில் வாய்ப்புகளையும், அரசு வழங்கும் சலுகைகளையும் எடுத்துக்கூறி, தமிழகத்தில் தொழில் துவக்க மாநில அரசு அழைப்பு விடுத்தது. அதை ஏற்று, தொழில் துவக்க பல முதலீட்டாளர்கள் முன்வந்தனர்.

கடந்த, 2021ல் காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் மருத்துவ கருவிகளை உற்பத்தி செய்யும் தொழில் பூங்கா, தேனியில் உணவு பூங்கா துவக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில், 30 சிப்காட் தொழில் பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

துாத்துக்குடியில் வின்பாஸ்ட் மின் வாகன தொழிற்சாலை, ராணிப்பேட்டையில் ஜாகுவார் லேண்டு ரோவர் கார் தொழிற்சாலை என, பல தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link