திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இடைத்தேர்தல் பணிகளைத் தொடங்க உத்தரவவிட்டுள்ளார். இது தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டில் வரவிருக்கும் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு பணிகளை இப்போதே முழுவீச்சில் தொடங்க கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
சமீபத்தில் நடந்து முடிந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் உள்ளிட்ட 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 2வது இடத்தை பெற்றாலும், வாக்கு சதவீதம் அதிகரித்து காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீதமுள்ள 5 தொகுதியில் போட்டியிட திமுகவுக்கு இந்த வாக்குவங்கி உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாளை டெல்லியில் நடக்க போவது என்ன? பாஜக எடுக்க போகும் முடிவு!
இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரக்கூடிய இடைத்தேர்தல் களம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்தத் தொகுதிகளில் தேர்தல் பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது மற்றும் தேர்தல் வியூகங்களை எவ்வாறு வகுப்பது என்பது தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் விரிவான கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், தேர்தல் ஆணையம் எப்போது இடைத்தேர்தலை அறிவித்தாலும் அதனை எதிர்கொண்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
வேட்பாளர் பட்டியல் தயாரிப்புக்கான வழிகாட்டுதல்
குறிப்பாக, இந்த ஐந்து தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை உடனடியாகத் தொடங்குமாறு கேட்டுக்கொண்டமு.க.ஸ்டாலின், தகுதியான வேட்பாளர்களைத் தேர்வுசெய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். கட்சிக்காகத் தொடர்ந்து களத்தில் நின்று உழைத்த, மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்ற கட்சி நிர்வாகிகள் மற்றும் முன்னோடிகளை அடையாளம் கண்டு உத்தேசப் பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என்றும்; ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 5 முதல் 6 நபர்களின் பெயர்கள் அடங்கிய வேட்பாளர் பட்டியலை உடனடியாகக் கட்சித் தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். இப்பட்டியலைத் தலைமை தீவிரமாகப் பரிசீலித்து, வெற்றி வாய்ப்பு அதிகம் கொண்ட தகுதியான வேட்பாளரை இறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத் தோல்விகளும் கள ஆய்வுகளும்
கடந்த முறை நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது இந்த குறிப்பிட்ட தொகுதிகளில் திமுக எதிர்கொண்ட சவால்கள் மற்றும் தோல்விகள் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. விராலிமலை தொகுதியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக மாவட்டச் செயலாளர் தென்னலூர் பழனியப்பன் (செல்லப்பாண்டி) தோல்வியடைந்தார். அதேபோன்று, கரூர் தொகுதியிலும் செந்தில் பாலாஜி பரிந்துரைத்த வேட்பாளர் அதிமுக வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவ நேரிட்டது. அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை தொகுதிகளிலும் கடந்த தேர்தலில் திமுக வெற்றியைத் தவறவிட்டிருந்தது. குறிப்பாகப் பெருந்துறையில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அண்மையில் கட்சியிலிருந்து விலகியுள்ளார். எனவே, கடந்த முறை ஏற்பட்ட தவறுகளைத் திருத்திக் கொண்டு, இந்த முறை இந்தத் தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்ய தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
கொங்கு மண்டலம் மற்றும் தனித்துவ வியூகம்
மேலும், கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ள பெருந்துறை தொகுதிக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. ஈரோடு மாவட்டப் பொறுப்பாளர் சு.முத்துசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பெருந்துறை பகுதியில் கூடுதல் கவனத்தோடு பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கைப் பொறுத்தவரை கே.என்.நேரு, அன்பில் மகேஸ் போன்ற மூத்த தலைவர்கள் உள்ள போதிலும், எவ்வித சுணக்கமும் இன்றி தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. கடந்த முறை தென் மாவட்டங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் தேர்தல் வெற்றிக்குக் கைகொடுத்த நிலையில், இம்முறை இடைத்தேர்தல் களத்தில் கூட்டணிக் கட்சிகளை மட்டுமே நம்பியிராமல், திமுகவின் சொந்தக் கட்டமைப்பு மற்றும் பலத்தின் மூலம் வெற்றியை ஈட்டும் வகையில் தொண்டர்கள் களமிறங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, காலம் தாழ்த்தாமல் வாக்குச்சாவடி அளவிலான பூத் கமிட்டி பணிகளை உடனடியாகத் துரிதப்படுத்துமாறும், வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து அரசின் சாதனைகளை எடுத்துரைக்குமாறும் கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது. எந்த நேரத்திலும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என்பதால், இந்த ஐந்து தொகுதிகளிலும் வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு திமுகவினர் இன்றே களப்பணியைத் தொடங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Source link
