தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் வர இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள், வாக்குறுதிகளை மக்களிடம் தெரிவித்தும், மற்ற கட்சிகளை விமர்சித்தும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது.
அந்த வகையில், அண்மையில் திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் முதல்வரும், அதிமுக மூத்த தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதனை தொடர்ந்து, முதல்வர் உத்தரவின் பேரில், ஓ.பன்னீர்செல்வம் தென்மாவட்டங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இத்தகைய சூழலில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலையொட்டி போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுக வாய்ப்பு அளித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடனான மோதலால் திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம், இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெற என்ற எண்ணத்தில் தீவிரமாக களமாடி வருகிறார்.
இந்த நிலையில் அதிக வாக்குகள் பெற்றுத்தரும் திமுக ஒன்றியச் செயலாளருக்கு 5 பவுன் தங்கம் வழங்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். தேர்தலை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் போடியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “இப்போது கலந்து கொண்டிருக்கின்ற 121 பூத்துகளுக்கும் நம்மை எதிர்த்து நிற்கின்ற அனைத்து வேட்பாளர்களை காட்டிலு அதிகமாக வாக்குகள் பெறுகின்ற ஒவ்வொரு பூத்திற்கும் நான் என்னுடைய பங்காக ரூ.1 லட்சம் வழங்குவேன். அதுமட்டுமல்லாமல், உங்களை எல்லாம் ஒருங்கிணைத்து அந்த பணிகளை சிறப்பாக அனைத்து பூத்துகளிலும் அதிகமான வாக்குகள் பெறுகின்ற ஒவ்வொரு ஒன்றியச் செயலாளருக்கும் 5 பவுனில் தங்கப் பதக்கம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
