“72 நாட்கள் காணாமல் போய்விட்டார்” – விஜய்யை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், திருவள்ளூரில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று (10-04-26) பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “சினிமாவில் ஒரு ஆள் 50 பேரை அடிக்க முடியும். நிஜத்தில் அடிக்க முடியுமா? எல்லாவற்றையும் நம்பாதீங்க. நீங்கள் எல்லாம் படித்தவர்கள், அறிவு திறமை உள்ளவர்கள், இந்த நாட்டை ஆளக்கூடிய சிங்கக் குட்டிகள்… ஒவ்வொரு இளைஞனுடைய சிந்தனையும் இந்த நாட்டினுடைய வளர்ச்சி பற்றி இருக்க வேண்டும். இளைஞர்கள் தான் இந்த நாட்டை காக்கக்கூடிய பாதுகாவலர். ஒவ்வொரு இளைஞரும் சிந்திக்க வேண்டிய நேரம் இது. நீங்கள் போடுகின்ற ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்.

ஒரே ஒரு பிரச்சனை வந்தது. 72 நாள் ஆள காணோம். நானெல்லாம் கட்சியில் சேர்ந்து 7 முறை சிறை சென்றேன். 51 ஆண்டு காலம் அதிமுகவில் பணியாற்றி இருக்கிறேன். 10 தேர்தலை நான் சந்தித்தேன். சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அன்று முதல் இன்று வரைக்கும் அணி மாறாமல் கட்சிக்காக உழைத்து வருகிறேன். எவ்வளவு பிரச்சனை வந்தாலும் துணிச்சலோடு சந்தித்து மக்களை காப்பதுதான் ஒரு கட்சி தலைவருடைய கடமை. இப்படி ஏதாவது இருக்கிறதா?

வாக்கு என்பது சாதாரண விஷயம் அல்ல. எம்.ஜி.ஆரும் நடிகர் தானே, விஜய்யும் நடிகர் தானே என்று ஒரு பத்திரிகையாளர் என்னிடம் கேட்டார். அதற்கு அவரையும் இவரையும் ஒப்பிட்டு பேசாதீங்க, எம்.ஜி.ஆர் நடிக்கின்ற போதே உழைத்தார். அவர் இறந்த பிறகு தன் சொத்தை காது கேளாத, வாய் பேசாதவர்களுக்கு கொடுத்த உத்தமன். இருக்கின்ற மக்களுக்கு நன்மை செய்தார், உயிர் நீத்தப் பிறகும் மக்களுக்கு நன்மை செய்தார். இவரைப் பற்றி நிறைய பேசலாம், புதிதாக வந்திருக்கிறார், வரட்டும் பார்க்கலாம்” என்று விஜய்யை மறைமுகமாகப்  விமர்சித்துப் பேசினார்.

Source link