75,000 டன் சோயாபீன் எண்ணெய் இறக்குமதியை ரத்து செய்தது இந்தியா

புதுடில்லி: தென் அமெரிக்காவிலிருந்து, வரும் ஏப்ரல் முதல் ஜூலை வரை இறக்குமதி செய்யவிருந்த கிட்டத்தட்ட 65,000 – 75,000 டன் வரையிலான சோயாபீன் எண்ணெய் ஒப்பந்தங்களை, இந்திய வர்த்தகர்கள் ரத்து செய்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் சோயாபீன் எண்ணெய் விலை திடீரென உயர்ந்துள்ளதால், இந்த ஒப்பந்தங்களை அதிக விலைக்கு வினியோகஸ்தர்களுக்கே திரும்ப விற்று லாபம் ஈட்டும் நோக்கில், இந்திய வர்த்தகர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். முன்பு ஒரு டன் 98,280 முதல் 1 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட நிலையில், தற்போது அதன் விலை 1.04 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதன் வாயிலாக ஒரு டன்னுக்கு கிட்டத்தட்ட 3,640 முதல் 5,460 ரூபாய் வரை வர்த்தகர்களுக்கு லாபம் கிடைக்கிறது.

மேலும், வரும் ஏப்ரல் மாதத்துக்கு பின், தென் அமெரிக்காவில் சோயாபீன் விளைச்சல் பெருமளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது சந்தையில் விலை வெகுவாக குறைய வாய்ப்புள்ளதால், தற்போதைய அதிக விலையிலான ஒப்பந்தங்களை ரத்து செய்வது எதிர்கால நஷ்டத்தை தவிர்க்க உதவும் என வர்த்தகர்கள் நினைக்கின்றனர்.

Source link