‘8 ஆயிரம் ரூபாய் கூப்பன்; தமிழ்நாடு முழுக்க இதுதான் ஒரே பேச்சு’-மு.க.ஸ்டாலின் பரப்புரை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை முடிந்து அடுத்தக்கட்ட தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனுத் தாக்கல் செய்ய 3 நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் திருவாரூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று திருவாரூரில் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். இந்நிலையில் இன்று திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார். திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றி வருகிறார்.

அவரது உரையில், ”திருச்சியில் மட்டும் 327 கோவில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. பஞ்சப்பூர் பேருந்து நிலையம் பேருந்து நிலையமா அல்லது விமான நிலையமா என்று வியக்கும் வகையில் அமைத்திருக்கிறோம். சூரியூரில் மினி மைதானம், ஜல்லிக்கட்டு மைதானம் என ஏராளமான திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது. காமராஜர் பெயரில் பிரமாண்ட நூலகம், சூரியூரில் ஒலிம்பிக் அகாடமி திறக்கப்பட உள்ளது. கடந்த ஐந்து வருடத்தில் இந்த திருச்சிக்காக 26 ஆயிரத்து 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. அதனால் தான் உங்களிடத்தில் உரிமையோடு நான் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.

இன்னைக்கு இத்தனை பெண்கள் கட்டணம் இல்லாமல் அரசு பேருந்தில் பயணிக்கிறார்களா இல்லையா? சொல்லுங்கள் பயணிக்கிறார்களா இல்லையா? மகளிருக்கு மாதந்தோறும் உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று சொன்னோம். ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு மாதம் தோறும் உரிமைத் தொகை வழங்குகிறோம் உண்டா இல்லையா? இப்பொழுது நம்மை பார்த்து தான் மற்றும் மாநிலங்களும் உரிமைத்தொகை கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். காலை உணவு திட்டம் வாக்குறுதியில் சொல்லாத திட்டம். 19 லட்சம் குழந்தைகள் சூடான சுவையான காலை உணவை சாப்பிட்டுவிட்டு வந்து படிக்கிறார்கள். நான் முதல்வன் திட்டமும் தேர்தல் அறிக்கையில் சொல்லப்படவில்லை. 48 லட்சம் திறன் பயிற்சி சான்றிதழ்களை நம்முடைய இளைஞர்கள் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பெற்றிருக்கிறார்கள்.

அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதை உறுதி செய்ய உருவாக்கப்பட்ட திட்டம் தான் புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டம். அதன் மூலம் ஒன்பது லட்சம் மாணவ மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நீங்கள் எல்லாம் சிறப்பாக கொண்டாட 3000 ரூபாய் வழங்கினோம். 3000  ரூபாய் பொங்கல் பரிசு எல்லாருக்கும் வந்ததா? மகளிர் உரிமை தொகையை தேர்தலை காரணம் காட்டி தடுக்க நினைத்தார்கள். அதையும் முன்கூட்டியே தெரிந்து மூன்று மாதங்களுக்கான தொகையையும், கோடைகால சிறப்பு நிதியையும் சேர்த்து இரண்டாயிரம் சேர்த்து ஐயாயிரம் ரூபாய் அட்வான்ஸாக கொடுத்தோம்.  5 ஆயிரம் ரூபாய் உங்களுக்கு வந்துச்சா இல்லையா? தமிழ்நாட்டின் சாதி கலவரம் இல்லை, பாஜக ஆளுகின்ற மாநிலத்தை போல மத கலவரங்கள் இல்லை, உத்தர பிரதேசத்தை போல கும்பல் வன்முறை இல்லை, மணிப்பூர் மாதிரி தொடர் வன்முறைகள் இல்லை. இப்படி எல்லாம் உருவாக்க வேண்டும் என்று பாஜக செய்த சூழ்ச்சிகளையும் நாம் முறியடித்து இருக்கிறோம்.

மகளிர் உரிமைத் தொகையை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப் போகிறோம். என்ன மகிழ்ச்சி தானே? மகிழ்ச்சியா இல்லையா? அதேபோல புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டத்தில் கல்லூரிக்கு போகின்ற மாணவர் மாணவர்களுக்கு இப்பொழுது மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிக் கொண்டு வருகிறோம். இனி அது 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. அதேபோல் காலை உணவு திட்டத்தை எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்த நாம் அறிவித்திருக்கிறோம். இதனால் 15 லட்சம் மாணவர்கள் பயன்பட போகிறார்கள். இன்னும் அதிகமான தாய்மார்கள் காலையில் சீக்கிரம் எழுந்து சமையல் செய்கின்ற சுமை குறையப் போகிறது. அதேபோல் இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய இன்னொரு சூப்பர் டூப்பர் வாக்குறுதி கொடுத்திருக்கிறோம். இல்லத்தரசிகள் தங்களுடைய வீட்டுக்கு தேவையான வாஷிங் மெஷின், பிரிட்ஜ், டிவி, கிரைண்டர், மிக்ஸி, மைக்ரோ அவன், இன்டக்சன் அடுப்பு என்ற வீட்டு உபயோக பொருட்களை புதிதாக வாங்கவும் அல்லது ஏற்கனவே பயன்படுத்திய இத்தகைய பொருட்களை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக வேறு வாங்கிக் கொள்ளவும் ‘இல்லத்தரசி’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். அதுவும் நீங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள உங்களுக்கு பிடித்த கடையில், உங்களுக்கு பிடித்த கம்பெனி உங்களுக்கு பிடித்த மாடலை பார்த்து இந்த பொருட்களை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். இதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 8000 ரூபாய் கூப்பன் கொடுத்து விடப் போகிறோம் என்று அறிவித்திருக்கிறோம். இன்னைக்கு தமிழ்நாடு முழுக்க இதைப்பற்றி தான் ஒரே பேச்சாக இருக்கிறது”என்றார்.

Source link