8 A.M. Metro: விட்டு விடுதலையாகும் இராவதி

படத்தில் இராவதியாக (சயாமி கேர்), ப்ரீத்தம் ஆக (குல்ஷன் தேவய்யா) நடித்துள்ளனர். இராவதி மகாராஷ்டிராவில் ஒரு சாமானிய இந்தியக் குடும்ப வாழ்க்கை வட்டத்துக்குள் வசிக்கிறாள். அவளுடைய சகோதரி ரியா ஹைதராபாத்தில் தலைப்பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறாள்.

ரியாவுக்கு துணையாகச் செல்ல வேண்டிய சூழல் இராவதிக்கு. ஆனால், கணவனால் உடன் வர இயலவில்லை. ரயில் பயணங்கள் மீது சிறு வயது சம்பவத்தால் மனோ பீதி கொண்டவள், வேறு வழியில்லாமல் தங்கைக்காக ஹைதராபாத் புறப்படுகிறாள். ரயில் நிலையம், இரையும் அதன் ஹார்ன்கள், பெட்டிகளுடன் நீண்டு கிடக்கும் ரயில் என எல்லாமே அவளை பயமுறுத்துகிறது.

ரயிலில் பெட்டி நிறைய ஆட்கள் இருந்தும் இராவுக்கு மூச்சு முட்டுகிறது. ஒரு டைரியை எடுத்து, தன்னை துரத்தும் கடும் பயத்தை கவிதையாக்கி தன்னைத் தானே ஆசுவாசப்படுத்த முயற்சிக்கிறாள். அத்துடன் முடிந்துவிடவில்லை அவளது ‘ரயில் பய(ண)ம்’, மருத்துவமனையில் தங்கையை சந்தித்தால் ‘வீட்டுக்கு மெட்ரோ ரயிலில் போ’ என்று சிபாரிசு செய்கிறாள்.

சந்திக்க விரும்பாத பயத்துக்குள் சூழலால் அகப்படும் இராவை மெட்ரோ ரயில் நிலையத்தில்தான் முதன்முதலில் சந்திக்கிறான் ப்ரீத்தம். மறைக்க முடியாத இராவதியின் பீதியும், செய்வதறியாத ப்ரீத்தம்மின் ஆற்றாமையும் படத்துக்குள் நம்மை ஈர்த்துவிடுகிறது.

முன்பின் அறியாத நபர் ஆறுதலாகயிருக்க எடுத்துக் கொண்ட முயற்சியால் தற்காலிகமாக மீண்டு வீடு வந்து சேரும் இராவுக்கு அடுத்தடுத்த பயணங்களுக்கும் மெட்ரோ ரயில்தான் சிபாரிசு செய்யப்படுகிறது.

மறுநாள் காலை 8 மணிக்கு தொடங்கி அடுத்த சில நாட்கள் காலை, மாலையென நீளும் இராவின் மெட்ரோ ரயில் பயணங்கள் ஊடான உரையாடல்களும், அதில் பரிமாறப்படும் ஆறுதல்களும், இரா தன்னை வதைத்த பய உணர்வுகளை விட்டு விடுதலையாவதும், ப்ரீத்தம் விடுதலையை நோக்கி நகர்வதும்தான் மீதிக் கதை. புதிய ரொட்டீன் இராவுக்கு புதுவாழ்வு தருகிறது.

மனநலம் சார்ந்த பிரச்சினைகள் உள்ளவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்காமல், ரசிக்கும்படி கண்ணியமாகக் காட்டியதற்காகவும், அவர்கள் வாயிலாக ஆழமான உண்மைகளை சமூகத்துக்கு கூறியதற்காகவும் இயக்குநரைப் பாராட்டலாம். அதுவும் அதை, ஓர் ஆண் – பெண் உறவு மூலமாகவும், அது பலமாக இருக்க பாலுறவு அவசியமில்லை என்பதன் வாயிலாகவும் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.

Source link