‘9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை, அபராதம்’

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது ஜூன் 19ஆம் தேதி கடையை மூடாததால் செல்போன் கடை வைத்திருந்த தந்தை மற்றும் மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள் இருவர் மீது காவல் நிலையத்தில் வைத்து போலீசார் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதனையடுத்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட ஒன்பது காவலர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட நிலையில் ஏ1 குற்றவாளியாகக் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சேர்க்கப்பட்டு 2,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையானது நடைபெற்று வந்தது நிலையில், 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார்.

இது தொடர்பான தண்டனை விவரங்களை நீதிபதி முத்துக்குமரன் இன்று (06-04-26) அறிவித்தார். அதில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன், சாமிதுரை, முத்துராஜ், செல்லத்துரை, வெயிலுமுத்து மற்றும் தாமஸ் ஆகிய 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்தார். மேலும், காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மரண தண்டனையுடன் ரூ.15 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் கொடுக்கப்பட்ட தண்டனை விவரங்கள் குறித்து பென்னிக்ஸ் தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களைச் சந்தித்துத் தெரிவித்தார். அதில் அவர் தெரிவித்ததாவது, “இந்த வழக்கு அரிதான வழக்கு. காவல் நிலைய மரணம் என்பது மனிதநேயமற்ற செயல். இவர்கள் மனிதர்களாக வாழ்வதற்கு தகுதியற்றவர்கள். இவர்கள் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அனைத்து குற்றவாளிகளுக்கும் இரட்டை தூக்குத் தண்டனையை நீதிமன்றம் கொடுத்திருக்கிறது. முதலாவது குற்றவாளி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு இரட்டை மரண தண்டனையும், இரண்டு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் 84 லட்சத்து 10,000 ரூபாய் அபராதமும் வழங்கியிருக்கின்றது. இரண்டாம் குற்றவாளி எஸ்.ஐ பாலகிருஷ்ணனுக்கு இரட்டை மரண தண்டனடையும், ஒரு ஏழு ஆண்டுகள் சிறைதண்டனடையும், ஒரு ஓராண்டு சிறை தண்டனை ஒன்றும், 84 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் நீதிமன்றம் வழங்கி இருக்கின்றது. மூன்றாம் குற்றவாளி எஸ்.ஐ ரகு கணேஷிற்கு இரட்டை மரண தண்டனையும், ஏழாண்டுகள் சிறைத் தண்டனை இரண்டும், மூன்றாண்டு சிறைத் தண்டனை ஒன்றும், ஓராண்டு சிறைதண்டனை ஒன்றும், 52 லட்சம் அபராதமும் நீதிமன்றம் விதித்திருக்கின்றது.

நான்காம் குற்றவாளி தலைமை காவலர் முருகனுக்கு இரட்டை மரண தண்டனையும், ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை இரண்டு பிரிவுகளிலும், ஓராண்டு சிறைத் தண்டனை ஒரு பிரிவிலும், மூன்றாண்டு சிறைத் தண்டனை, 50 லட்ச ரூபாய் அபராதம் விதித்திருக்கின்றது. ஐந்தாவது குற்றவாளி சாமிதுரை என்பவருக்கு இரட்டை தூக்கு தண்டனையும், ஒரு பிரிவின் கீழ் ஏழாண்டு சிறை தண்டனையும், மற்றொரு பிரிவின் கீழ் ஓராண்டு சிறை தண்டனையும், 2 லட்சத்தி 25ஆயிரம் அபராதமும் நீதிமன்றம் விதித்திருக்கின்றது. ஆறாவது குற்றவாளி தலைமை காவலர் முத்துராஜுக்கு இரட்டை மரண தண்டனையும், ஏழாண்டுகள் சிறைத்தண்டனை இரண்டு பிரிவுகளிலும், மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை ஒரு பிரிவிலும், ஓராண்டு சிறைத் தண்டனை ஒரு பிரிவிலும், 32 லட்சம் அபராதமும் நீதிமன்றம் விதித்திருக்கின்றது. ஏழாம் குற்றவாளி காவலர் செல்லதுறைக்கு இரட்டை மரண தண்டனையும், ஏழாண்டுகள் சிறைத் தண்டனை ஒரு பிரிவிலும், ஓராண்டு சிறைத் தண்டனை ஒரு பிரிவிலும் நீதிமன்றம் விதித்திருக்கின்றது. எட்டாம் குற்றவாளி காவலர் தாமஸ் பிரான்சிஸ் என்பவருக்கு இரட்டை மரண தண்டனையும், ஏழாண்டுகள் சிறைத் தண்டனை ஒரு சட்டப்பிரிவிலும், ஓராண்டு சிறைத் தண்டனை ஒரு சட்டப்பிரிவிலும், மூன்றாண்டு சிறைத் தண்டனை ஒரு சட்டப்பிரிவிலும், ரூ.40,46000 அபராதமும் நீதிமன்றம் விதித்திருக்கின்றது. ஒன்பதாவது குற்றவாளி காவலர் வெயிலுமுத்து என்பவருக்கு இரட்டை மரண தண்டனையும் ஏழாண்டுகள் சிறைத் தண்டனை ஒரு சட்டப்பிரிவிலும், ஓராண்டு சிறைத்தண்டனை ஒரு சட்டப்பிரிவிலும் வழங்கி இருக்கின்றது. மற்றொரு குற்றவாளி பால்துரை இறந்துவிட்டதால் அவருக்கு தண்டனை எதுவும் நீதிமன்றம் வழங்கவில்லை” என்று கூறினார். 

Source link